Friday, May 9, 2025

பிளஸ் 2 ரிசல்ட் : பார்வையற்றோர் பள்ளியில் 100 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

பூந்தமல்லியில் பார்வை குறைபாடுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பார்வை குறைபாடுடைய 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர்.

இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை 17 மாணவ மாணவிகள் எழுதியிருந்தனர். இந்த நிலையில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் தேர்வு எழுதிய 17 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

இதில் தமிழகத்திலேயே இந்த அரசுப் பள்ளியில் கணினி மூலம் தேர்வு எழுதும் பார்வை திறன் குறைபாடு உள்ள முதல் மாணவன் என்ற பெருமையைப் பெற்ற எம்.ஆனந்த் 486 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று உள்ளார்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். மேலும் 17 பேரும் தேர்ச்சி பெற்றதால் தற்போது அரசு பார்வை குறைபாடுடையோர் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர்களுக்கான சேர்க்கையும் தொடங்கி நடைபெறுவதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news