ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்ஹாம் பகுதியில், தீவிரவாதிகளின் கொடூர தாக்குதலுக்கு 26 பேர் பலியாகினர். இதற்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும், பயங்கரவாதக் குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின், பிரதிநிதியான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றுள்ளது.
தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், சிந்து நதிநீர் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு அவசர நடவடிக்கைளை, இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் வாரியமான BCCI, கிரிக்கெட் தொடர்பான முக்கிய முடிவொன்றை அறிவித்துள்ளது.
இதுகுறித்து BCCI துணைத்தலைவர் ராஜிவ் சுக்லா, ”பாதிக்கப்பட்டவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். எங்கள் அரசாங்கம் என்ன சொன்னாலும், நாங்கள் செய்வோம். அரசாங்கத்தின் நிலைப்பாடு காரணமாக நாங்கள் பாகிஸ்தானுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதில்லை.
மேலும் இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் விளையாட மாட்டோம். ஆனால், ICC நிகழ்வைப் பொறுத்தவரை, ICC ஈடுபாட்டின் காரணமாக நாங்கள் விளையாடுகிறோம். என்ன நடக்கிறது என்பது ICCக்குத் தெரியும்,” என்றார்.
BCCI செயலாளர் Devajit Saikia பஹல்காம் தாக்குதல் குறித்து, ” BCCI சார்பாக இந்த கொடூரமான, கோழைத்தனமான செயலை நாங்கள் கண்டிக்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எங்களது மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவர்களின் வலியையும், துயரத்தையும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் கைகோர்த்து நிற்கிறோம்,” என்று உருக்கம் தெரிவித்துள்ளார். கடைசியாக இந்திய அணி கடந்த 2008ம் ஆண்டு, பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் விளையாடியது.
அதேபோல பாகிஸ்தான் அணி 2023ம் ஆண்டு ICC நடத்திய, ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது, இந்தியா வந்து விளையாடியது. அண்மையில் பாகிஸ்தான் நடத்திய சாம்பியன்ஸ் டிராபி தொடரை, இந்திய அணி துபாய் ஆடுகளங்களில் விளையாடியது.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமான PCB பெருத்த நஷ்டத்தினை சந்தித்து, மொத்தமாக இழுத்து மூடும் நிலைமைக்குத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.