Thursday, April 24, 2025

20 வருடமாக ‘தூங்கும் இளவரசர்’! சவுதியில் காத்திருக்கும் குடும்பம்…! என்ன நடந்தது ?

ஒரு ராஜவம்சத்தின் மகுடத்துக்குள் புதைந்திருக்கும் ஒரு மௌன கதை… பளிச்சென ஒளிரும் அரண்மனைக் கோபுரங்களுக்குப் பின்னால், விழிக்கத் தயங்கும் ஒரு கண்கள்… இந்தக் கதையின் மையத்தில் இருக்கிறார் – சவுதி இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால். உலகம் அவரை “தூங்கும் இளவரசர்” என்று அழைக்கிறது. ஏன் தெரியுமா? அதற்குப் பின்னால் உள்ளது இருபது ஆண்டுகளுக்கும் மேலான ஒரு துயரக் கதை.

பாரம்பரிய மன்னராட்சி அமைப்பை தொடர்ந்து நடத்தி வரும் சவுதி அரேபியாவின் அரச குடும்பம், உலகத்தின் மிக ஆடம்பரமான, செல்வசாலியான, சக்தி வாய்ந்த குடும்பங்களில் ஒன்று. ஆனால் அந்த அரசபிள்ளைகளின் வாழ்க்கை எல்லாம் செழிப்போடு மட்டுமில்லை, சிலர் மனதைக் கலங்க வைக்கும் துயரங்களின் கீழும் வாழ்கின்றனர்.

2005ம் ஆண்டு. இளவரசர் அல்-வலீத் ராணுவக் கல்லூரியில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலம். எதிர்பாரா சாலை விபத்து ஒன்று… அவருடைய வாழ்க்கையே புரட்டிப்போட்டது. அந்த விபத்தில் படுகாயமடைந்த அவர், கோமாவுக்கு சென்றார். நாள்கள் மாதங்களாக மாறின. மாதங்கள் வருடங்களாயின. ஆனால் அவர் விழிக்கவே இல்லை. இருபது ஆண்டுகளாக அவர் கோமா நிலையில் தான் இருக்கிறார்.

தற்போது, சவுதியின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல்அஜிஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் பராமரிக்கப்படுகிறார். உணவுக்கூட உணவுக் குழாய் மூலமாகவே அவருக்குப் வழங்கப்படுகிறது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும், இயந்திர உதவியோடுதான் நகர்கிறது.

2019-ம் ஆண்டு ஒரு சிறிய ஒளிக்கீற்று – அவர் விரலை லேசாக அசைத்தார், தலை சிறிதளவு நகர்த்தினார். அது அவரது குடும்பத்தினருக்கு ஒரு புதிய நம்பிக்கையைத் தூண்டியது. அவர் ஒரு நாள் விழித்தே தீர்வார் என்பதே அவர்களின் நம்பிக்கை.

ஆனால் மருத்துவர்கள் கைவிட்டுள்ளனர். “இனி அவருக்கு சுயநினைவு திரும்ப வாய்ப்பு குறைவு” எனக் கூறி, வென்டிலேட்டர் உதவியை நிறுத்த பரிந்துரை செய்தனர். ஆனால், அவரது தந்தை காலித் பின் தலால் ஒப்புக்கொள்ளவில்லை. “கடவுள் அவரை அழைக்க விரும்பியிருந்தால், அந்த விபத்திலேயே எடுத்திருப்பார். நாங்கள் இன்னும் காத்திருக்கிறோம்” என்று சொல்லி, தன் மகனின் உயிர் நாடியை உயிராக காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

அரசவம்சத்தில் பிறந்தாலும், இளவரசருக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கை இதுவா? என்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தும். சொத்து, செல்வம், அதிகாரம் அனைத்தும் இருந்தும், விழிக்க முடியாத ஒரு கண் பார்வையை வைத்திருக்கிறார் அல்-வலீத். அவரின் வாழ்க்கை செழிப்புக்கும் துயரத்திற்கும் இடையே தொங்கிக்கொண்டு இருக்கிறது.

இன்றும் அவரது குடும்பம், சிறு சைகையொன்றையும் நம்பிக்கையுடன் எதிர்நோக்கியே காத்திருக்கிறது.

Latest news