கடந்த 2005ம் ஆண்டு விஜய், ஜெனிலியா, பிபாஷா பாசு, வடிவேலு நடிப்பில் வெளியான படம் சச்சின். ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படம் 20 வருடங்கள் கழித்து ஏப்ரல் 18ம் தேதி ரீ-ரிலீஸ் ஆனது.
படத்தில் இடம்பெறும் Cute Moment களை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து Vibe செய்து வருகின்றனர். அந்த வகையில் சச்சினில் ஜெனிலியாவின் தோழியாக வந்த துணை நடிகை, வெகுவாக கவனம் பெற்றுள்ளார். அந்த படத்திற்கு பிறகு அவர் வேறெந்த படத்திலும் நடிக்கவில்லை.
என்றாலும் ரசிகர்கள் அவர் யார்? தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்று தொடர் தேடுதலில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அந்த துணை நடிகையின் பெயர் ரஷ்மி. தொழில்முனைவோரான இவர் வெளிநாட்டில் கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
ரசிகர்களின் திடீர் அன்பினால் திக்கு முக்காடிப் போன ரஷ்மி, இதுகுறித்து வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், ”அந்த படத்தில் நடித்தபோது நான் காலேஜ் படித்துக்கொண்டு இருந்தேன். 20 வருடங்கள் கழித்து ரசிகர்களால் கொண்டாடப்படுவதில் மகிழ்ச்சி.
என்னுடைய காட்சிகளை எடிட் செய்து தனி வீடியோவாக வெளியிட்டு விட்டீர்கள். உங்கள் அனைவரது அன்பிற்கும் நன்றி,” என்று நெகிழ்ந்து போய் இருக்கிறார்.