முற்றுப்புள்ளி வைக்கப்படாமல் நீண்டு தொடரும் பிரச்சனையாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருவது நாம் அறிந்ததே. இந்நிலையில் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் நடவடிக்கையாக ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முடிவு செய்தது. இதனை அமெரிக்கா கொஞ்சம் கூட விரும்பவில்லை. ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அது அமெரிக்காவுக்கு பிரச்சனையாக மாறும் என்பதே அதற்கு காரணம்.
இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் இன்று நடைபெற உள்ளது. “இந்த பேச்சுவார்த்தையில் ஈரான் ஒப்பந்தம் செய்யாவிட்டால் ராணுவ நடவடிக்கை தொடங்கவும் தயங்கமாட்டேன்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்திருப்பதால் உலக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இன்று நடைபெறவுள்ள 2ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈரான் வெளியறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி-யும் அமெரிக்கா சார்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்பு தூதராக ஸ்டீவ் விட்காஃப் உள்ளிட்ட பிற பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேச்சுவார்த்தையில் அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று அமெரிக்காவுடன், ஈரான் கையெழுத்திடாவிட்டால் ராணுவ நடவடிக்கை தொடங்கவும் தயங்கமாட்டேன் என்று டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இதுதொடர்பாக நேற்று டொனால்ட் டிரம்பிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு டொனால்ட் டிரம்ப், ‛‛ஈரான் சிறந்த நாடாக மாற வாய்ப்புள்ளது. பலிகள் ஏற்படாமல் அந்த நாடு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அதுதான் எனது முதல் திட்டம். அதேவேளையில் எனது 2வது திட்டத்தை கையில் எடுக்க வைத்தால் அது ஈரானுக்கு மிகவும் மோசமாக அமையும்” என்று கூறியிருப்பது பதற்றத்தையே ஏற்படுத்துகிறது.
அதாவது ஈரான் பேச்சுவார்த்தை மூலம் அணுசக்தி திட்டத்தின்படி அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என்று ஒப்பந்தம் செய்தால் ஈரான் அமைதியாக வாழ முடியும். இல்லாவிட்டால் ராணுவ நடவடிக்கை, குண்டு வீச்சு என்று களமிறங்கிவிடுவேன் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி இருப்பது உலக நாடுகளிடையே “அடுத்து என்ன நடக்குமோ” என்ற எதிர்ப்பார்ப்பை எகிற வைத்துள்ளது.