Saturday, April 19, 2025

தங்கம் ஒரு Safe Haven-னா? வெள்ளி ஒரு Smart Weapon! ரெண்டுல எது ‘best’ ?

தங்கத்தின் விலை தொடர்ந்து வானத்தை நோக்கி பறந்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சிறு முதலீட்டாளர்கள் இடையே வெள்ளி குறித்து அதிக கவனம் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை $3,000 அவுன்ஸை தாண்டி உயர்ந்திருக்கிறது. இந்திய சந்தையிலும் அதற்கேற்ப தாக்கம் ஏற்பட்டு, தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.70,000 வரை விலை பெற்றுள்ளது. இது சாதாரண வர்க்கத்திற்கு தங்கத்தை முதலீட்டாக நினைப்பதே சவாலான விஷயமாக மாற்றியுள்ளது.

இந்த சூழ்நிலையில், பாதுகாப்பாகவும் குறைந்த முதலீட்டுடன் முதலடி எடுக்க விரும்பும்வர்கள் வெள்ளி பக்கம் திரும்பி வருகிறார்கள். சர்வதேச சந்தையில், 2024ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து வெள்ளியின் விலை சுமார் 35% வரை உயர்ந்துள்ளது. சென்னையில் தற்போது ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,01,000ஐ தாண்டியுள்ளது. நிபுணர்களின் கணிப்புப்படி, 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்த விலை ரூ.1,10,000ஐ எட்டும் வாய்ப்பு அதிகம். வெள்ளி விலையிலான இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக தொழில்துறையின் அதிகரிக்கும் தேவை குறிப்பிடப்படுகிறது.

சோலார் பேனல்கள், மின்னணு உபகரணங்கள், மின் வாகனங்கள் போன்ற தொழில்களில் வெள்ளிக்கு முக்கிய பங்கு உண்டு. இதனால் உலகம் முழுவதும் வெள்ளிக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. இதனுடன் சேர்ந்து அமெரிக்கா வட்டி விகிதங்களை குறைக்கும் சாத்தியக்கூடுகளும் இருக்கின்றன. முதலீட்டாளர்கள் நிலையான வருமானத்திலிருந்து பாதுகாப்பான மதிப்புமிக்க பொருட்களுக்குப் போகும் இந்த நேரத்தில் வெள்ளியும் தங்கத்துடன் இணைந்து ஓர் “ஆல்டர்னேட்டிவ் முதலீடு” ஆக மாறுகிறது.

தங்கத்தை வாங்க முடியாமல் போன நிலையில், அதே தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் நான்கு கிலோ வெள்ளியை வாங்க முடிகிறது. இதனால் வெள்ளி, சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்றதானதாக மாறியுள்ளது. ஆனால், வெள்ளியின் இந்த பலம் ஒரு பக்கம் மட்டுமே. மற்றொரு பக்கம், வெள்ளியின் மறுசுழற்சி அல்லது மீளவிற்பனை என்பது தங்கம் போல எளிதல்ல. வெள்ளி நகைகளை வாங்கும் கடைகளே குறைவாகவே உள்ளது. சில இடங்களில் வெள்ளி வாங்கவே தயாரில்லை. மேலும் அடகு வைக்கவும், அவசர தேவைக்காக பணமாக மாற்றவும் வெள்ளி மிகவும் சிரமமான ஒன்றாகவே இருக்கிறது.

இதனால், வெள்ளியில் முதலீடு செய்ய விரும்புவோர் நகைகள், பாத்திரங்கள் அல்லது சிலைகள் போன்ற பாரம்பரிய முறைகளைவிட, வெள்ளி ETFக்கள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகள் போன்ற நவீன முதலீட்டு வழிகளை தேர்வு செய்வது சிறந்ததாக experts கூறுகின்றனர். இந்த வகை முதலீடுகள் சந்தை மூலதனம் அதிகம் கொண்டிருப்பதுடன், செலவுக் கட்டணமும் குறைவாக இருக்கும். மேலும், தேவையான நேரத்தில் எளிதாக விற்பனை செய்யக்கூடிய வசதியும் உள்ளது. வெள்ளி விலை தொடர்ந்தும் உயரக் கூடும் என்பதால், இது ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குள் நீண்டகால முதலீட்டாக நன்மை தரக்கூடும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.

இருப்பினும், வெள்ளி ஒரு பாதுகாப்பான முதலீடு என்ற அந்தஸ்தை தங்கம் போலப் பெற்றிருக்கவில்லை என்பதும் உண்மைதான். எதனைச் சொன்னாலும், தங்கம் தான் Safe Haven என நிபுணர்கள் ஒருமனதாகக் கூறுகிறார்கள். தங்க பத்திரங்கள், தங்க ETFகள் போன்றவற்றில் முதலீடு செய்வது, வெள்ளியைவிட எப்போதும் அதிக பாதுகாப்பையும், நிலைத்த வளர்ச்சியையும் தரும்.

மேலும் வெள்ளியைவிட மியூச்சுவல் ஃபண்டுகள், பிக்சட் டெபாசிட், தபால் அலுவலக திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வதும் நிதி அடிப்படையில் சிறந்ததுதான். வெள்ளி விலை மேலும் உயரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அதில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும் என்பதில் உறுதி இல்லை. அதனால், வெள்ளியை ஒரு சிறிய முதலீட்டாக கருதி, ஏற்கெனவே உள்ள முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் ஒரு பங்கு அளவிலேயே வைத்துக் கொள்ளலாம்.

முடிவில், வெள்ளி நல்ல முதலீடா? என்றால், ஆம். ஆனால் அதையே நம்பி முழுமையான முதலீட்டை செய்வது நல்லதா? என்றால், அது சரி அல்ல. நிதி சம்பந்தமான முடிவுகளை எடுத்துக் கொண்டபோது, கவனமாக சிந்தித்து, முதலீடுகளை வகைப்படுத்தி செயல்படுவது அவசியம். இந்த சந்தை நமக்கு அதற்கான பாடத்தை கற்பிக்கிறது

Latest news