Wednesday, April 16, 2025

இனி தங்கம் வாங்குவது கனவு தான் போல! 2 வாரங்களில் சம்பவம் செய்துவிட்ட விலையேற்றம்! வரும் நாட்களில் குறைய வாய்ப்பா?

“ஒரு குண்ணுமணி அளவாவது தங்கம் வாங்கி வைக்கணும்…” என்ற ஆசையும் ஆர்வமும் அதற்கான முயற்சிகளும் மக்களிடையே எப்பொழுதுமே குறையாமல் இருப்பதற்கு நியாமான சிலபல காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. மேலும் தங்கம் கையில் இருந்தால் அது ஒரு தைரியத்தை கொடுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையே.

மேலும் கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலை விறுவிறுவென ஏறுவதும் சட்டென சரிவதும் என மக்களை பதற்றத்திலேயே வைத்திருந்தது. குறிப்பாக கடந்த வாரத்தில் சென்னையில் சவரனுக்கு 2 ஆயிரத்து 680 ரூபாய் சரிவடைந்த நிலையில் நடுத்தர மக்களும் நகை வாங்க நினைத்தவர்களும் “வண்டியை விடுடா நகை கடைக்கு…” என்று கிளம்பிவிட்டனர். இந்த நிலையில் ஐந்து நாட்கள் தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை இந்த வாரம் மீண்டும் தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. அதாவது மூன்று நாட்களில் மட்டும் 4 ஆயிரத்து 160 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது. 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை 76 ஆயிரத்து 300ஐ தொட்டு மக்களை கதிகலங்க செய்திருக்கிறது.

சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை அல்லது போர் போன்ற அரசியல் நிச்சயமற்ற சூழல்கள் ஏற்படும் போது பாதுகாப்பாக முதலீடு செய்வதற்கு ஏற்றதாக தங்கத்தின் பக்கமே மக்கள் திபுதிபுவென படையெடுக்கின்றனர். இந்த ஒன்று போதாதா… தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பதற்கும் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சாணி கொம்பில் போய் நிற்பதற்கும்?

மேலும் கடந்த வருடம் 2 ஆயிரத்து 800 டாலரில் இருந்த தங்கத்தின் விலை தற்போது மூவாயிரம் டாலரை கடந்திருக்கிறது. ஏன்… கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் அதாவது 28.34 கிராம் தங்கத்தின் விலை 3005 டாலராக இருந்த நிலையில் கூட தற்போது 3005.09 டாலராக வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம் 8 கிராம் என்ற சவரன் மதிப்பில் விற்கப்படுவதால் அடிப்படையில் இந்தியாவில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ஏறக்குறைய 69,000 ரூபாயாக இருக்கிறது.

தங்கத்தின் விலை உயர்வு ஏற்கனவே எதிர்பார்த்தது தான் என்று கூறப்பட்டலும் 3000 டாலர் வரை தங்கத்தின் விலை உயரும் என நாங்கள் எதிர்பார்த்த நிலையில் அதன் எல்லையை கடந்து விட்டது என்பதால் வரும் நாட்களில் விலை குறைய வாய்ப்பு மிக மிக குறைவு என்று கணிக்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். குறிப்பாக பிற நாடுகளில் தங்கம் முதலீடாக பார்க்கப்படும் நிலையில் இந்தியா போன்ற நாடுகளில் தங்கம் பாதுகாப்பாகன எதிர்கால சேமிப்பாகவும் கௌரவமாகவும் பார்க்கப்படுகிறது என்பதாலேயே மக்களை பாடாய் படுத்துகிறது என்பதை ஒப்புக்கொள்ள தான் செய்யவேண்டும்.

இது ஒரு செய்தி மட்டுமே. பொதுமக்கள் இதனை கண்டிப்பாக முதலீட்டுக்கான ஆலோசனையாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Latest news