சென்னை, மும்பை அணிகளை அவர்களின் சொந்த மைதானத்தில் வீழ்த்திய, பெங்களூரு அணியால் தங்களது மைதானத்தில் வெற்றி பெற முடியவில்லை. ஏப்ரல் 10ம் தேதி டெல்லி-பெங்களூரு அணிகள் சின்னச்சாமி மைதானத்தில் மோதின.
இதில் டாஸ் வென்ற டெல்லி RCBயை 163 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றது. விசித்திரமாக பெங்களூருவை சேர்ந்த ராகுல் டெல்லி அணிக்காகவும், டெல்லியை சேர்ந்த விராட் பெங்களூரு அணிக்காகவும் ஆடினர்.
இந்த மோதலில் ராகுல் வெற்றிவாகை சூடினார். போட்டியின் போது கேப்டன் ரஜத் படிதார் எடுத்த, சில முடிவுகள் கோலிக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து அவர் தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் இருவரிடமும் இதுகுறித்து காரசாரமாக விவாதித்தார்.
இது நேரலையிலும் ஒளிபரப்பானது. அப்போது வர்ணனையில் இருந்த சேவாக், ஆகாஷ் சோப்ரா இருவரும் இதைக் குறிப்பிட்டு, ” எப்படி இருந்தாலும் கோலி கேப்டன் இல்லை. எனவே இதுகுறித்து அவர் ரஜத்திடம் தான் பேச வேண்டும்,” என்று சுட்டிக் காட்டினர்.
இந்தநிலையில் போட்டியில் தாங்கள் தோல்வி அடைந்ததற்கு, பேட்ஸ்மேன்கள் தான் காரணம் என கேப்டன் ரஜத் குற்றஞ்சாட்டி இருக்கிறார். இதுகுறித்து அவர், ” 60 ரன்களுக்கு 1 விக்கெட் என்று இருந்த அணி ஒருகட்டத்தில் 90 ரன்களுக்கு 4 விக்கெட்களை பறிகொடுத்தது.
இதுவே எங்களின் தோல்விக்குக் காரணம்,” என்று நேரடியாக கோலியைத் தாக்கியுள்ளார். கோலி 22 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து படிக்கல் 1 ரன்னிலும், லிவிங்ஸ்டன் 4 ரன்னிலும், ஜிதேஷ் சர்மா 3 ரன்னிலும், விக்கெட்களை எளிதாக பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
இதனை சுட்டிக்காட்டி தான் படிதார் பேசியிருக்கிறார். அதேநேரம் ராகுல் 5 ரன்னில் இருந்தபோது கொடுத்த கேட்சை, ரஜத் எளிதாகக் கோட்டை விட்டார். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட ராகுல் 93 ரன்களை விளாசி, டெல்லிக்கு 4வது வெற்றியை பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.