Saturday, April 19, 2025

‘இந்த’ 2 பேருமே தேவையில்ல கழுவி ஊற்றும் ‘ரசிகர்கள்’

தொடர் தோல்விகளால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே ஆப் கனவு, கனவாகவே போய்விடும் போல இருக்கிறது. நடப்பு IPL தொடரில் சென்னை அணி வரிசையாக 4 தோல்விகளை சந்தித்துள்ளது. CSK தவிர்த்து மற்ற 9 அணிகளும் இளம்வீரர்களை வளர்த்து விடுகின்றன.

ஆனால் சென்னை அணியோ ஏலத்தில் எடுப்பதோடு சரி. அதற்குப்பிறகு அவர்களைத் திரும்பியும் பார்ப்பதில்லை. இதனால் வாய்ப்பு கிடைக்காமல் அன்ஷூல் கம்போஜ், வன்ஷ் பேடி என திறமையான வீரர்கள் பலரும், தொடர்ந்து பெஞ்சிலேயே இருக்கின்றனர்.

பீல்டிங், பேட்டிங், பவுலிங் என மொத்தமாகவே, இந்த சீசனில் சென்னை அணி அடிவாங்குகிறது. அதோடு தோனி மீதும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப் படுகின்றன. ஆனால் சென்னை அணியின் தோல்விகளுக்கு CSK கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், மீண்டும் தாய்க்கழகத்துக்கு திரும்பிய ரவிச்சந்திரன் அஸ்வின் இருவருமே முழுக் காரணமாக இருக்கின்றனர்.

ஓபனராக இறங்கி நன்றாக ஆடிய ருதுராஜ், ‘நான் தலைகீழாகத் தான் குதிப்பேன்’ என, தொடர்ந்து ஒன் டவுனில் களமிறங்கி அவுட்டாகி செல்கிறார். இத்தனை தோல்விகளுக்குப் பிறகும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. பேட்டிங்கில் தான் சொதப்புகிறார் என்றால் கேப்டனாக அதைவிடவும் மோசம்.

பவர்பிளேவில் அஸ்வினை இறக்கி ரன்களைத் தாரை வார்த்து விடுகிறார். பதிரனாவை ஆரம்பத்தில் இறக்க மறுப்பது, சிக்கனமாக பந்துவீசும் நூர் அஹ்மது, ஜடேஜாவுக்கு முழு ஓவர்களையும் தர மாட்டேன் என்று அடம்பிடிப்பது, என பல்வேறு உள்ளடி வேலைகளை செய்கிறார்.

மறுபுறம் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை அணிக்காக விளையாடும் அஸ்வின் இன்னும் படுமோசம். பவர்பிளேவில் இவரின் ஓவர்களை எதிரணி பேட்ஸ்மேன்கள், பவுண்டரிக்குத் தொடர்ச்சியாக பறக்க விடுகின்றனர்.

ராஜஸ்தானுக்கு எதிராக 46 ரன்கள், பஞ்சாப்பிற்கு எதிராக 48 ரன்களை அஸ்வின் விட்டுக் கொடுத்துள்ளார். RRக்கு எதிராக 6 ரன்கள் வித்தியாசத்திலும், பஞ்சாப்பிற்கு எதிராக 18 ரன்கள் வித்தியாசத்திலும் தான் சென்னை தோற்றது.

அஸ்வினுக்கு பதிலாக நூர் மற்றும் ஜடேஜாவிற்கு முழு ஓவர்களையும், ருதுராஜ் கொடுத்து இருந்தால் சென்னை நிச்சயம் வெற்றிப்பாதைக்குத் திரும்பி இருக்கும். இதுபோன்ற சிறுசிறு தவறுகள் தான், சென்னை அணியின் பிளே ஆப் கனவில் சுடுதண்ணீரை ஊற்றி அழித்துள்ளன.

கேப்டன் ருதுராஜ் தான் இப்படி இருக்கிறார் என்றால், பயிற்சியாளர் பிளெமிங் அவருக்கும் மேலே இருக்கிறார். இத்தனை தோல்விகளுக்கு பிறகும் கூட, ”நாங்கள் அனுபவ வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுப்போம்” என்று, கொண்ட கொள்கையில் உறுதியாக உள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள், ”அவ்ளோ தான் நம்மள முடிச்சு விட்டீங்க போங்க. இந்த வருஷம் IPL கப்பு நமக்கில்லை,” என்று சமூக வலைதளங்களில், CSK அணியைத் தொடர்ச்சியாக கழுவி ஊற்றி வருகின்றனர்.

Latest news