Saturday, April 5, 2025

100 நாள் வேலைத்திட்டத்தில் ‘மெகா மோசடி’ வசமாக சிக்கிய ‘பிரபல’ வீரரின் சகோதரி

கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமி, இந்திய அணியில் இடம்பெறவில்லை. பிப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான், மீண்டும் அணிக்குத் திரும்பினார்.

அதில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். நடப்பு IPL தொடரில், ஷமி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வருகிறார்.100 நாள் வேலைத்திட்டத்தில் ஷமியின் சகோதரி மற்றும் அவரது குடும்பத்தினர், வேலை எதுவும் செய்யாமலே ஊதியம் பெற்றதாக, கடந்த மாதம் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து இதுதொடர்பான விசாரணைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதில் ஷமியின் சகோதரி குடும்பத்தினர் மோசடியில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது. இந்தநிலையில் 2021ம் ஆண்டு தொடங்கி 2024ம் ஆண்டு வரை, சுமார் 3 ஆண்டுகள் இந்த மோசடியில் அவர்கள் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் தான் இந்த மெகா மோசடி நடைபெற்றுள்ளது. முதற்கட்ட விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டு  இருப்பதாக, மாவட்ட நீதிபதி நிதி குப்தா வாட்ஸ் தெரிவித்து உள்ளார். இதையடுத்து மோசடி செய்தவர்களை இடைநீக்கம் செய்து, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

ஷமியின் சகோதரி ஷபீனா அவரது கணவர் கஸ்னவி, ஷபீனாவின் மைத்துனர்களான அமீர் சுஹைல், நஸ்ருதீன், ஷேக்கு மற்றும் கிராமத்தலைவர் குலே ஆயிஷாவின் மகன்கள், மகள்கள் என மொத்தம் 18 பேர் இதில் சம்பந்தப்பட்டு இருக்கின்றனர்.

கிராமத்தலைவரும், ஷபீனாவின் மாமியாருமான குலே ஆயிஷா தான், இதற்குத் தலைவராக செயல்பட்டு இருக்கிறார். ‘பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்’ என்பதுபோல, இந்த மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வேலை செய்யாமல் மோசடி செய்து சம்பாதித்த பணத்தை மீட்டெடுத்து, கிராம பிரதானின் கணக்குகளை பறிமுதல் செய்வதற்கு மாவட்ட நிர்வாகி உத்தரவிட்டு இருக்கிறார். பிரபல வீரரின் சகோதரி 100 நாள் வேலைத்திட்டத்தில் மோசடி செய்து, சம்பளம் பெற்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Latest news