Saturday, April 5, 2025

தோண்டத் தோண்ட தங்க குவியல்! இந்தியாவும் சீனாவும் இனி வேற லெவல்! 1000 டன் தங்க வேட்டை!

“என்ன வேண்டுமானாலும் சொல்லுங்க… சீனா தான் அடுத்த நம்பர் 1 வல்லரசு” என்று ஒரு தரப்பு சொல்லுவதற்கு ஏற்றாற்போல் தான் இருக்கிறது நடப்பவற்றை பார்த்தால். விஷயம் என்னவென்றால் சீனாவில் தலா 1000 டன் தங்கம் புதைந்துள்ள இரண்டு தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பத்திரிகை செய்தி வெளியிட்டு உலகை அதிரவிட்டுள்ளது.

தங்கச் சுரங்கத்தை கண்டறிவதற்கான ஆராய்ச்சிகள் சீனாவில் நீண்டகாலமாக நடந்து வந்த நிலையில் ஹூனான் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் 1000 டன் அளவுக்கு தங்கம் இருப்பதாக கடந்த நவம்பரில் அறிவிப்பு வெளியிட்டு பரபரப்பை கிளப்பியது. தற்போது லியோனிங் மாகாணத்தில் இன்னொரு 1000 டன் தங்கச் சுரங்கம் இருப்பதாக மற்றொரு செய்தி வந்திருப்பது தங்க வர்த்தகர்கள் மத்தியிலும் உலக நாடுகள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி ஒட்டுமொத்த உலகையும் சீனாவின் பக்கம் திருப்பியுள்ளது.

சீனா அதிநவீன ‘3டி ஜியாலஜிக்கல் மானிட்டரிங்’ தொழில்நுட்ப்பத்தை பயன்படுத்தி இந்த தங்கப் புதையலை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்ததைத்தொடர்ந்து ஹூனான் தங்கச் சுரங்கத்தின் மதிப்பு மட்டுமே 83 பில்லியின் அமெரிக்க டாலர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் கோடிக்கும் அதிகம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இவை உண்மையென்றால் உலகில் அதிக தங்கம் உற்பத்தி செய்யும் தென்னாப்பிரிக்காவின் ‘சவுத்டீப் கோல்டு மைன்’ சுரங்கத்தை விட பெரிய தங்கச் சுரங்கமாக சீனாவின் தங்கச் சுரங்கம் உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தங்க உற்பத்தியில் சீனா கணிசமான அளவு தங்கம் உற்பத்தி செய்தாலும், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா நாடுகளே தற்போது முன்னணியில் கோடி கட்டி பறக்கின்றன.

இப்போது கண்டறியப்பட்டுள்ள தங்கச் சுரங்கத்தின்மூலம் அந்த நாடுகளை பின்னுக்குத் தள்ளி சீனாவின் கை ஓங்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, உலக அளவில் வர்த்தக வரி தொடர்பான போர் அபாயமும் பொருளாதார தேக்கம் குறித்த அச்சங்களும் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் சீனாவுக்கு அடித்துள்ள இந்த ‘ஜாக்பாட்’ அந்நாட்டை மற்ற நாடுகளை விட Top-ல் கொண்டுசெல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தச் செய்தி வெளியான சில தினங்களுக்குள் இந்தியாவிலும் ஒடிஷா மாநிலத்தில் அதிக அளவில் தங்கம் இருப்பதாக வெளிவந்துள்ள செய்தி இந்தியர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்க்கடித்துள்ளது. இந்திய புவியியல் ஆய்வு மையம் அதாவது GSI நடத்திய பல்வேறு கட்ட சோதனையின் முடிவாக ஒடிசா மாநிலத்தில் உள்ள சுந்தர்கர், நபராங்புர், கியோஞ்சர், தியோகார் உள்ளிட்ட மாவட்டங்களில் கணிசமான அளவு தங்கம் புதைந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது இந்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சியே.

Latest news