மோகன்லால் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘லூசிபர்’ படத்தின் 2-ம் பாகமாக உருவான ‘எல் 2 எம்புரான்’ கடந்த 27ம் தேதி வெளியானது.
இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள், 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தை நினைவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், சமூக பிரிவினையைத் தூண்டுவதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. இதையடுத்து படத்தில் இடம்பெற்ற 17 சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது.
இந்நிலையில் எம்புரான் படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது : “முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரை காட்சிகளை எம்புரான் திரைப்படக்குழு நீக்க வேண்டும்.
மோகன்லால் உள்ளிட்ட கேரளத்தின் பெரும் கலைஞர்களே தமிழ்நாட்டில் சொத்துக்கள் வாங்கி நிம்மதியாக வாழ்ந்து வரும் நிலையில், தமிழர்கள் ஏதோ மலையாள மக்களுக்கு எதிரிகள் போலவும், தமிழ்நாடு கேரளாவை அழிக்க முயல்வது போலவும் படத்தில் வன்மத்துடன் சித்தரிப்பது இனப்பகையைத் தூண்டி, இரு மாநில மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்த முனையும் திட்டமிட்ட சதியாகும்.
ஆகவே, எம்புரான் திரைப்படக்குழு உடனடியாக முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பற்றதாக சித்தரிக்கும் அவதூறு பரப்புரைக் காட்சிகளை நீக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.