Sunday, April 20, 2025

”நான் பொடியன் கெடையாது” சாம்பியனை ‘சுளுக்கெடுத்த’ AK

எப்பொழுதும் போல முதல் 2 போட்டிகளை சாமிக்கு விட்ட மும்பை, 3வது போட்டியில் வெகுண்டெழுந்து நடப்பு சாம்பியனை துவம்சம் செய்து விட்டது. முதல் போட்டியில் தோல்வி அடைந்த கொல்கத்தா, 2வது போட்டியில் வெற்றிபெற்று பார்முக்குத் திரும்பியது.

மார்ச் 31ம் தேதி மும்பை – கொல்கத்தா அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. டாஸ் வென்ற MI தைரியமாக பவுலிங் தேர்வு செய்தது. டி காக், நரைன் இருவரும் ஓபனிங் இறங்கினர். ஆரம்பத்திலேயே மும்பை வெறிகொண்டு தாக்க ஆரம்பித்து விட்டது.

என்ன ஏது என்று சுதாரிப்பதற்குள்ளேயே, கொல்கத்தா 3 விக்கெட்களை பறிகொடுத்து விட்டது. இந்த அடியில் இருந்து, கடைசிவரை அந்த அணியால் மீள முடியவில்லை. தொடர்ந்து 16.2 ஓவரில் 116 ரன்களுக்கு KKR சுருண்டது. இதையடுத்து களமிறங்கிய MI 12.5 ஓவரில் 121 ரன்கள் எடுத்து, மெகா வெற்றியைப் பதிவு செய்தது.

இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் தற்போது 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த போட்டியில் MI வெற்றி பெற்றதற்கு அறிமுக வீரர் அஸ்வனி குமார் தான் முக்கிய காரணம். T20 போட்டிகளில் அதிகம் ஆடாத அஸ்வனி முதல் பந்திலேயே, KKR கேப்டன் ரஹானேவைத் தூக்கி விட்டார்.

இதற்கு முன் Ali Murtaza, Alzarri Joseph, Dewald Brevis மூவரும், தங்களின் அறிமுக IPL தொடரின் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து சாதனை படைத்தனர். அந்த லிஸ்டில் தற்போது அஸ்வனி குமாரும் இணைந்துள்ளார். 3 ஓவர்கள் வீசிய அஸ்வனி 24 ரன்களை விட்டுக்கொடுத்து, 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

முதல் போட்டியிலேயே தானொரு ‘டான்’ என நிரூபித்த, அஸ்வனியின் சொந்த ஊர் சண்டிகரின் அருகில் உள்ள ஜஞ்சேரி. T20 மற்றும் முதல்தர போட்டிகளில் பஞ்சாப் மாநிலத்துக்காக ஆடியுள்ளார். ரஞ்சி கோப்பை, சையத் முஷ்டாக் அலி T20 தொடரில் இவரின் பந்துவீச்சு பரவலாகக் கவனம் பெற்றது.

கடந்தாண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியில், அஸ்வனி குமார் இடம்பெற்று இருந்தார். ஆனால் ஆடும் பிளேயிங் லெவனில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. சொற்ப போட்டிகளில் ஆடியிருந்தாலும் இவரின் அசாதாரண பவுலிங் திறமையை பார்த்த, மும்பை மெகா ஏலத்தில் அஸ்வனி குமாரை 30 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

தற்போது அறிமுக IPL போட்டியிலேயே அதிரடி ஆட்டக்காரர்களை வீழ்த்தி, ”யார்ரா இந்த பையன்” என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். சென்னைக்கு எதிரான போட்டியில் விக்னேஷ் புத்தூரை அறிமுகம் செய்த மும்பை, தற்போது அஸ்வனி குமாரை இறக்கியுள்ளது.

இதனால் வரும் போட்டிகளில் மும்பை அடுத்ததாக, எந்த இளம்பவுலரை இறக்கி Magic காமிக்கப் போகிறது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

Latest news