இந்த தங்கம் விலை சரசரவென ஜெட் வேகத்தில் உயர்ந்து உச்சம் தொடுகிறது. விலை சரிந்துவிட்டது என்று செய்தி வந்தாலும் மிகவும் குறைவான இறக்கமாகவே இருக்கிறது. ஒரு சில நாட்களுக்கு முன் தங்கம் விலை குறைந்துவிட்டது என்று சொல்லப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக அது கடந்த ஒரு மாதத்தில் உயர்ந்தே இருக்கிறது என்பதையே தரவுகள் சொல்கின்றன. இதற்கிடையே கடந்த நாட்களில் தங்கம் விலை எப்படிப்பட்ட சரிவுகளை சந்தித்துள்ளது என்பதை விளக்கியுள்ள பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன், இது வரும் காலத்தில் எந்தளவுக்கு உயர வாய்ப்பு இருக்கிறது என்பதையும் கூறியுள்ளார்.
இதைப்பற்றி அவர் தனது யூடியூப் பக்கத்தில், “தங்கம் விலை ரூ.8100க்கு மேல் தான் இருக்கிறது. 24 கேரட் தங்கமும் ரூ.9000 நோக்கிப் போய்க் கொண்டு இருக்கிறது. சர்வதேச சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கம் மூவாயிரம் டாலருக்கு மேல் தான் இருக்கிறது. இந்தாண்டுக்குள் தங்கம் விலை 3000 டாலரை தாண்டும் என்றவர்கள் இப்போது 3200 டாலர் வரை போகும் என்கிறார்கள். 3200ஐ தாண்டும் என்றவர்கள் இப்போது 3500 முதல் 3600 டாலர் வரை தாண்டும் என்கிறார்கள்.
ஒரு கிலோ தங்கம் இருந்தால் ஒவ்வொரு காலகட்டத்திலும் என்ன வாங்க முடியும் என்பதைப் பார்க்கலாம்.. 1990இல் ஒரு கிலோ தங்கம் இருந்தால் மாருதி 800 காரை வாங்கலாம். 2000இல் ஒரு கிலோ தங்கம் இருந்தால் மாருதி எஸ்டீம் வாங்கலாம். 2005ல் அப்கிரேட் ஆகி ஒரு டொயோட்டா இன்னோவா காரை வாங்கலாம். 2010ல் டொயோட்டா ஃபார்ச்சூனர் வாங்க முடியும். 2019ல் அதிரடியாக அப்கிரேட் ஆகி BMW X1 வாங்கலாம். 2024ல் BMW X3 கார் வாங்கலாம். இதே டிரெண்ட் தொடர்ந்தால் சீக்கிரம் ஒரு கிலோ தங்கம் இருந்தால் பிரைவேட் ஜெட் கூட வாங்கலாம் என்ற நிலை உருவாகும். இப்படித் தங்கத்தின் மதிப்பு அதிகரித்தே வருகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இது ஒரு செய்தி மட்டுமே என்பதால் இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.