Tuesday, April 1, 2025

மீண்டும் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது ஏன்? வெளியான புது தகவல்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித் ஷா-வை சந்தித்து பேசியது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, எந்தவித முன்னறிவிப்புமின்றி நேற்று திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றார். அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் டெல்லி விரைந்தனர்.

மீண்டும் பாஜவுடன் கூட்டணி அமைக்கவே இந்த பயணம் என கூறப்பட்ட நிலையில், டெல்லியில் அண்மையில் திறக்கப்பட்ட அதிமுக அலுவலகத்தை காண வந்ததாக பழனிசாமி கூறினார். யாரையும் சந்திக்க டெல்லிக்கு வரவில்லை எனக்கூறிய சில மணி நேரங்களிலேயே, பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா-வை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

பழனிசாமியுடன் அதிமுக நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தம்பிதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். அமித் ஷா உடன் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்தது. இந்த சந்திப்பின்போது மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Latest news