Sunday, April 20, 2025

‘காதல்’ திருமணம், NASA-வின் நிராகரிப்பு சுனிதா வில்லியம்ஸின் ‘மறுபக்கம்’..

கடந்த பல மாதங்களாக ஒட்டுமொத்த உலகமும், ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த அந்த அற்புதம் கடைசியில் அரங்கேறி விட்டது. விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 9 மாதங்கள் கழித்து மீண்டும் பூமிக்குத் திரும்பிய நிகழ்வு தான் அது.

இதனால் கடந்த சில தினங்களாக தொலைக்காட்சிகள் தொடங்கி, சமூக வலைதளங்கள் வரை, எங்கும் நீக்கமற சுனிதாவே நிறைந்திருக்கிறார். சுனிதா இதுவரை படைத்த சாதனைகள், அவரின் தளராத மன உறுதி என்று அவர்குறித்த அனைத்து விஷயங்களுமே, மக்களால் கொண்டாடப்படுகின்றன.

அந்தவகையில் சுனிதாவின் இளமைக்காலம் மற்றும், அவரது சொந்த வாழ்க்கை குறித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகின்றன. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

சுனிதாவின் தந்தை தீபக் பாண்டியா குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தின் ஜூலாசன் கிராமத்தை சேர்ந்தவர். மருத்துவரான தீபக்கின் சகோதரர் அமெரிக்காவில் இருந்ததால், தீபக்கும் அமெரிக்கா சென்று தன்னுடைய மருத்துவ பணியைத் தொடங்கினார்.

அங்கு உர்சுலின் பொன்னி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஜெய், டீனா, சுனிதா என்று 3 குழந்தைகள். சுனிதா 1965ம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹாயோ மாகாணத்தில் பிறந்தார். தன்னுடைய 6 வயதில் இருந்தே நீச்சல் வீராங்கனையாக திகழ்ந்த சுனிதா, நீச்சலுக்காக ஏராளமான பதக்கங்களையும் வாங்கிக் குவித்துள்ளார்.

இதனால் அவரது குடும்பத்தினர் எதிர்காலத்தில் அவர், சிறந்த நீச்சல் வீராங்கனையாக வருவார் என்று நினைத்தனர். ஆனால் விலங்குகள் மீது கொண்ட காதலால் கால்நடை மருத்துவராக சுனிதா ஆசைப்பட்டார். என்றாலும் அவருக்கு கால்நடை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை.

இதனால் வருத்தம் அடைந்த சுனிதா தனது சகோதரரின் ஆலோசனைப்படி, அமெரிக்க கடற்படை அகாடமியில் 1983 ஆம் ஆண்டு சேர்ந்தார். கடற்படை அகாடமியில் தான் தன்னுடைய கணவர் மைக்கேல் வில்லியம்ஸை சுனிதா சந்தித்தார். அங்கு இருவருக்கும் நல்ல நட்பு உருவானது. 2 ஆண்டுகள் கழித்து நண்பர் ஒருவரின் திருமணத்தில் சந்தித்த போது சுனிதா – வில்லியம்ஸ் இடையே காதல் மலர்ந்தது.

1987ம் ஆண்டு இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். பயிற்சி முடிந்த பிறகு 1989 ஆம் ஆண்டு, கடற்படையில் பயிற்சி விமானியாக இணைந்தார். கடற்படையில் 30க்கும் அதிகமான விமானங்களை இயக்கி இருக்கும் சுனிதா, 3000 மணி நேரங்களுக்கும் மேலாக வான்வெளியில் பறந்து சாதனை படைத்துள்ளார்.

1993 ஆம் ஆண்டு மேரிலாந்தில் உள்ள கடற்படை டெஸ்ட் பைலட் பள்ளியில் சுனிதா பயின்றார். அப்போது ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தை பார்வையிட்டார். அங்கு தான் அவர் நிலவுக்கு சென்ற விண்வெளி வீரர் ஜான் யங்கை சந்தித்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய போது, நாசாவில் பணியாற்ற வேண்டும் என்று சுனிதாவிற்கு ஆசை பிறந்தது.

கையோடு நாசாவில் பணியாற்ற சுனிதா விண்ணப்பித்தார். ஆனால் நாசா அவரது விண்ணப்பத்தை நிராகரித்து விட்டது. என்றாலும் தன்னுடைய முயற்சியில் சற்றும் மனம் தளராத சுனிதா, 1995ம் ஆண்டு  புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், பொறியியல் மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றார்.

தொடர்ந்து 1997ம் ஆண்டு மீண்டும் நாசாவில் சேர விண்ணப்பித்தார். இம்முறை சுனிதாவை நிராகரிக்க நாசாவுக்கு எந்த காரணமுமில்லை. அவரை விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தியது. Rest Is History என்பதுபோல, அதற்குப்பிறகு சுனிதா படைத்தது எல்லாமே வரலாறு தான்.

Latest news