Sunday, April 20, 2025

அப்போ IPL போட்டிய ‘நடத்தாதீங்க’ கைவிரித்த காவல்துறையால் ‘ஆடிப்போன’ BCCI..

மார்ச் 22ம் தேதி அதாவது வருகின்ற சனிக்கிழமை மாலை, IPL தொடர் கோலாகலமாக கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

தொடர்ந்து மார்ச் 23ம் தேதி IPL தொடரின் பரம எதிரிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகின்றன. இதனால் சென்னை வெயிலைக் காட்டிலும் ஆட்டத்தில் அதிகம் அனல் பறக்கலாம், என எதிர்பார்க்கப் படுகிறது.

இந்தநிலையில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் IPL போட்டிக்கு பாதுகாப்பு தரமுடியாது என்று, காவல்துறை கைவிரித்து விட்டதால், BCCI கடும் அதிர்ச்சியில் உள்ளதாகத் தெரிகிறது. அன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் அஜிங்கியா ரஹானே தலைமையிலான KKR அணி, ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

அன்று ராமநவமி என்பதால், மாலை 3.30 மணிக்குத் தொடங்கும் இந்த போட்டிக்கு தங்களால் பாதுகாப்பு அளிக்க முடியாது என்று, காவல்துறை திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டதாம். குறிப்பாக கொல்கத்தா பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, அன்றைய தினம் 20 ஆயிரம் ஊர்வலங்களுக்குத் திட்டமிட்டு இருக்கிறாராம்.

இதனால் IPL போட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொல்கத்தா காவல்துறை மேற்கு வங்கத்தின் கிரிக்கெட் வாரியத்திடம், தங்களின் நிலையை எடுத்துக்கூறி போட்டியை வேறு தேதிக்கு மாற்றி வைக்கும்படி தெரிவித்து விட்டனராம். இதனால் போட்டியை வேறு எங்காவது நடத்தும் நிலைமைக்கு BCCI தள்ளப்பட்டுள்ளது.

இதே ராமநவமி காரணமாக கடந்தாண்டு கொல்கத்தா-ராஜஸ்தான் மோதிய போட்டி, வேறு தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் அதில் இருந்து பாடம் கற்காமல், மீண்டும் அதே தவறினை BCCI செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news