சமீப காலமாக முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு முக்கியமான குழப்பம் நீடித்து வருகிறது. தங்கம் மற்றும் பங்கு சந்தை ஆகிய இவை இரண்டில் எது சிறந்தது? எதிர்காலத்தில் எந்த முதலீட்டுக்கு அதிகபட்ச லாபம் கிடைக்கும்? என முடிவெடுப்பதில் சிக்கல் இருக்கிறது. இந்நிலையில் எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்டு என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் அடுத்த 3 ஆண்டுகளில் பங்குச்சந்தை தங்கத்தை விட சிறப்பாக செயல்படும் என கணிக்கப்பட்டிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் வருமான உயர்வு காரணமாக பங்குச்சந்தை செயல்பாடு நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார ஸ்திரத்தன்மை இல்லாத காலங்களில் தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்பட்டாலும் தற்போதைய சந்தை சூழலில் பங்குச்சந்தை அதிகமாக தேர்ந்தெடுக்கப்படும் விருப்பமாக இருக்கிறது.
இந்த அறிக்கை குறிப்பாக சென்செக்ஸ் டூ கோல்ட் ரேஷியோவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளின் தரவுகளை அலசும்போது தங்கம் / பங்குச்சந்தையை விட 36 சதவீதம் மட்டுமே சிறப்பாக செயல்பட்டிருப்பதால் தங்கம் பங்குச்சந்தையை விட சில நேரங்களில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று சொல்லலாம். பெரும்பாலான நேரங்களில் பங்குச்சந்தை தான் முதலீடாளர்களுக்கு அதிக வருமானத்தை கொடுத்துள்ளது.
மேலும் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் ஏப்ரல் மாதத்தில் தங்கம் 10 கிராம் 86 ஆயிரத்து 875 என்ற புதிய உச்சத்தை எட்டியது என்றபோதிலும் இது வெறும் 0.21 % அதிகரிப்பையே குறிக்கிறது. மார்ச் மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 2500 ரூபாய் உயர்ந்துள்ளது. பாதுகாப்பான முதலீடு என்ற காரணத்தினால் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது.
தங்கம் மற்றும் பங்குச்சந்தை ஆகிய இரண்டும் நீண்ட காலமாக ஒன்றுக்கொன்று போட்டியிடும் முதலீட்டு தளங்களாக இருந்து வந்தாலும் பொருளாதார மீட்சி காலங்களில் பங்குச்சந்தை வரலாற்று ரீதியாக நல்ல வருமானத்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இனிவரும் காலங்களிலும் இதே போல பங்குச்சந்தை சிறப்பாக செயல்படும் என்று எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்டு அறிக்கை யூகித்திருக்கிறது.
இந்த தகவல் ஒரு கணிப்பு மட்டுமே. இதை கண்டிப்பாக முதலீட்டுக்கான ஆலோசனையாக எடுத்துக்கொள்ள கூடாது என பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.