நடப்பு IPL தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே, பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. வீரர்களுக்கு BCCI அறிவித்த புதிய விதிகள், நட்சத்திர வீரர்கள் விலகல் ஆகிய காரணங்களால், இந்த தொடர் சற்று எக்ஸ்ட்ரா Spicy ஆக இருக்கும் என தெரிகிறது.
குறிப்பாக நடப்பு தொடரில் வீரர்கள் விலகலால் மும்பை, லக்னோ அணிகள் பெரும் பின்னடைவை சந்தித்து உள்ளன. மும்பை அணியில் பும்ரா காயம் காரணமாக ஆரம்ப போட்டிகளை மிஸ் செய்கிறார். ஹர்திக் பாண்டியா தடை காரணமாக முதல் போட்டியில் விளையாட முடியாது.
இது மட்டுமின்றி அந்த அணியின் அல்லா ஹசன்பர், லிஸாத் வில்லியம்ஸ் இருவரும், IPL தொடரைவிட்டே மொத்தமாக வெளியேறி இருக்கின்றனர். இவை அந்த அணியின் பிளே ஆப் கனவில் சுடுதண்ணியை தூக்கி ஊற்றியுள்ளன. இதனால் மும்பை நாலாபுறமும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.
மறுபுறம் லக்னோ அணி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ், ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் ஆகியோரை முதல் பாதியில் பயன்படுத்த முடியாது. இதனால் அந்த அணி அடுத்து என்ன செய்யலாம்? என்று ரூம் போட்டு யோசிக்கும், பரிதாப நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் முன்னாள் சென்னை வீரர் ஷர்துல் தாகூரை, லக்னோ அணியில் சேர்த்து அவருக்குத் தீவிர பயிற்சி அளித்து வருகிறது. மெகா ஏலத்தில் ஷர்துல் விலை போகவில்லை. ஆனால் ரஞ்சி, சையத் முஷ்டாக் என உள்ளூர் தொடர்களில் கலக்கினார்.
இந்த ஆல்ரவுண்டர் ஆட்டத்தால் கவரப்பட்டு, தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுமாறு அவரை மும்பை
இந்தியன்ஸ் கேட்டுக் கொண்டது. என்றாலும் இதுகுறித்து அந்த அணி அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இந்த கேப்பில் தான் லக்னோ கெடா வெட்டியிருக்கிறது.
ஷர்துலை சட்டென அணிக்குள் இழுத்து போட்டுள்ளது. லக்னோ ஜெர்சி அணிந்து அவர் பயிற்சி செய்யும் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. ஏனெனில் BCCIயிடம் அனுமதி வாங்காமல் தான் இந்த விஷயத்தை லக்னோ செய்துள்ளதாம்.
இதனால் நடப்பு IPL தொடரில் ஷர்துல், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ஆடுவார் என்று தெரிகிறது.