Sunday, April 20, 2025

மெரட்டுவாங்க வீட்டுக்குள்ளயே ‘ஒளிஞ்சுப்பேன்’ ரசிகர்களுக்கு ‘ஷாக்’ கொடுத்த வெற்றிவீரர்..

சமீபத்தில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பல்வேறு சர்ச்சைகளை சமாளித்து, இந்திய அணி வெற்றிகரமாக கோப்பையை வீட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. பும்ரா இல்லாமல் இந்த தொடரை எதிர்கொண்ட இந்திய அணி நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற ‘டான்களை’ அடித்து விரட்டி தான் கோப்பையை முத்தமிட்டுள்ளது.

இந்த வெற்றிக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியின், மாயாஜால சுழற்பந்து வீச்சும் முக்கிய காரணமாகும். இந்தநிலையில் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்ததாக, அண்மையில் அளித்த பேட்டியில் வருண் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து வருண், ”தற்போது எனக்கு நடக்கும் நல்ல விஷயங்களை நம்ப முடியவில்லை. 2021 டி20 உலகக் கோப்பை தொடரில் நான் சரியாக விளையாடவில்லை என்று பல விமர்சனங்களை எதிர்கொண்டேன். அந்த சமயத்தில் எனக்கு நிறையக் கொலை மிரட்டல்களும் வந்தது. இந்தியாவிற்கு திரும்பக்கூடாது என்று மிரட்டினார்கள். என்னுடைய வீட்டிற்கு வந்து என்னைத் தேடுவார்கள்.

சில சமயம் நான் என்னுடைய வீட்டில் மறைந்து கொள்வேன். நான் விமான நிலையத்திலிருந்து வீடு திரும்பியபோது பைக்கில் சிலர் என்னை பின் தொடர்ந்து வந்தார்கள். இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. இதனால் நான் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருந்தேன். ரசிகர்கள் மிகவும் எமோஷனலானவர்கள் என்று புரிந்துகொள்ள முடிகிறது.

2021 டி20 உலகக் கோப்பை தொடரில் என்னால் சரியாக செயல்பட முடியாமல் போனதை எண்ணி சோர்வடைந்தேன். வாய்ப்பு கிடைத்தும் 1 விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை என்று வருத்தப்பட்டேன். அதன் பிறகு எனக்கு அணியில் 3 ஆண்டுகளுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்திய அணிக்குள் முதல் முறை நான் விளையாட வாய்ப்பு பெற்றதை விட, மீண்டும் வாய்ப்பு பெறுவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனாலும் தொடர்ந்து நான் பயிற்சி செய்து கொண்டே இருந்தேன். அணியில் விளையாட மீண்டும் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற, உத்தரவாதம் கூட இல்லாத காலம் அது.

எல்லாம் முடிந்து விட்டது என்று நினைத்தேன். அப்போது தான் IPL கோப்பையை வென்றோம். அதன்பிறகு மீண்டும் எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. மகிழ்ச்சியாக உணர்ந்தேன். தற்போது இந்த சாம்பியன் டிராபி கோப்பை எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை அளித்துள்ளது.

4 போட்டிகளில் மட்டுமே விளையாடினாலும் நான் அணிக்கு சொந்தமானவன். எனக்கும் ஒரு இடம் இருக்கிறது என்று உணர்ந்தேன். ஆனால் இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை,” என்று தன்னுடைய கம்பேக் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.

நடப்பு IPL தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக, வருண் விளையாடவிருக்கிறார். அவரை 12 கோடி ரூபாய்க்கு அந்த அணி தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest news