YouTube ல், காமெடி நடிகர் சமய் ரெய்னாவின், ‘இந்தியா காட் லேட்டன்ட்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பங்கேற்ற பிரபல யு டியூபர் ரன்வீர் அல்லாபாடியா, போட்டியாளர் ஒருவரிடம் பெற்றோர் உடலுறவு முறை குறித்து அருவருக்கத்தக்க வகையில் கேள்வி கேட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டார். மேலும் யு டியூப்பிலும் அந்த வீடியோ நீக்கப்பட்டது.
தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை, ஒரே வழக்காக இணைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ரன்வீர் அல்லாபாடியா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: பிரபலம் என்பதால் மனதில் தோன்றுவதை எல்லாம் ரன்வீர் அல்லாபாடியா பேசலாமா? இது ஆபாசம் இல்லையென்றால், வேறு எது ஆபாசம்? ஆபாசமாக பேசுவது நகைச்சுவை அல்ல.
யு டியூப்பில் ஆபாச உள்ளடக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாடுகள் இல்லாததால், யு டியூபர்கள் வாய்க்கு வந்தபடி பேசி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.