அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகி விட்டது. அதற்கு பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால், உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்” என அவர் பேசியதுதான் நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியுள்ளது.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அமித்ஷா பேச்சு குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது : அம்பேத்ரைப் பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ளமுடியும்? எவ்வளவு வயிற்றெரிச்சல் என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். சனாதனிகளின் சதி முயற்சிகள் சாம்பலாகும் என அவர் கூறியுள்ளார்.