திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள நார்த்தங்குடி பகுதியை சேர்ந்தவர் சித்ரா. இவர் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணி புரிந்து வருகிறார்.
இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது, சிலர் நள்ளிரவு வீட்டுக்கதவை உடைக்க முயன்றுள்ளனர். அந்த சத்தம்கேட்டு, சித்ராவின் மாமனார் கோவிந்தராஜ் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது, 4 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி வீட்டில் கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். கோவிந்தராஜின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டில் உள்ளவர்களும், அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டதும் 4 பேரும் தப்பி ஓடினர்.
இது குறித்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததும், இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வலங்கைமான் போலீசார், அப்பகுதியில் பதுங்கி இருந்த திருச்சி பகுதியைச்சேர்ந்த சஜாத் அலி, திருவையாறு பகுதியைச் சேர்ந்த மார்ட்டின் பிரபுராஜா ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர்.
தப்பி ஓடிய திருவையாறு பகுதியைச்சேர்ந்த செல்வ கார்த்தி, கலையரசன் ஆகியோரையும் பிடித்தனர். செல்வ கார்த்தி மீது கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் நாமக்கல் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 51 திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளது விசாரணையில் தெரிய வந்தது. இவர்கள் பல்வேறு இடங்களில் கூட்டாக திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்ததுள்ளது.