2016ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான போது நாடே கதிகலங்கியது.
அதற்குபின் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் பெருமளவு பொதுமக்களின் புழக்கத்தில் நிலைக்கவே இல்லை.
அதன் காரணமாகவே, மினி பண மதிப்பிழப்பு எனக் கூறப்படும் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் நடவடிக்கை வெகுஜன மக்களை பெரிதும் பாதிக்கவில்லை. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 ரூபாய் நோட்டுகளில் 8.4 சதவீதமும், 500 ரூபாயில் 14.4 சதவீதமும் போலி நோட்டுகள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயத்தில், 10,100 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகள் 11.6 சதவீதம் வரை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் கைப்பற்றப்பட்ட மொத்த கள்ள ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்கள் 2,25,769 ரூபாய் ஆகும். இதில், 91,110 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கண்டறியப்பட்டு இருப்பதால், 500 ரூபாய் நோட்டை வாங்கும் போது அது நல்ல நோட்டா கள்ள நோட்டா என சரிபார்ப்பது அவசியம்.