வார இறுதி நாட்கள், சிறப்பு நாட்கள் போன்ற நாட்களில் மட்டுமில்லாமல் நினைக்கும் போதெல்லாம் சிக்கன், மட்டன் என பலரும் சாப்பிடத் தொடங்கி விட்டனர்.
வீட்டிலேயே இறைச்சி சமைத்து சாப்பிடுவதே ஆரோக்கியமான நடைமுறையாக இருக்கும்.
அதற்கு தரமான இறைச்சியை தேர்வு செய்வது அவசியம். அடர்சிவப்பு நிறத்தில் இருக்கும் மட்டன் புதியது என்று அர்த்தம். அதே நேரம் சிக்கன் பிங்க் நிறத்திலோ அல்லது வெள்ளை நிறத்திலோ இருக்கலாம். அடர்சிவப்பு நிறத்தில் இருக்கும் சிக்கன் பழைய இறைச்சியாக இருக்க கூடும்.
சாம்பல் அல்லது பச்சை நிற சிக்கன் கெட்டுப்போனது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இறைச்சியை அமுக்கினால் அது மீண்டும் அதே இடத்துக்கு வந்து விட்டதென்றால் அந்த இறைச்சியை வாங்கலாம். அமுங்கி அப்படியே நின்று விட்டால், அந்த இறைச்சியை வாங்காமல் தவிர்ப்பது நன்று. இறைச்சியில் துர்நாற்றம் ஏற்பட்டால் அதை வாங்க வேண்டாம்.
மட்டன் மற்றும் மாட்டிறைச்சியில் கொழுப்புச்சத்துக்கள் நிறைந்த வெள்ளை நிறக் கோடுகள், இறைச்சியின் மேல்புறத்தில் காணப்படும். Marbeling என அழைக்கப்படும் இந்த அமைப்பு இருக்கும் இறைச்சி ருசி நிறைந்ததாக இருக்கும் என்பதால் அவற்றை தேர்வு செய்து வாங்க வேண்டும்.
இறைச்சியின் மீதுள்ள தோல் தேவையில்லை என்றால் அதை நீக்கிவிட்டு வாங்க வேண்டும். pack செய்யப்பட்ட இறைச்சியை வாங்கினால் ஓட்டை இல்லாமல் pack செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் ஒப்புதல் முத்திரை இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நம்பகமான கடைகளில் இருந்தே இறைச்சியை வாங்குவது சிறப்பான ஆரோக்கியத்துக்கு உகந்ததாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.