2020ஆம் ஆண்டு நடந்து முடிந்த அமெரிக்க அதிபதிருக்கான தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப்பும் ஜனநாயக கட்சி சார்பாக ஜோ பைடனும் போட்டியிட்டனர்.
ஜோ பைடன் வெற்றி பெற்றதை அடுத்து, தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகவும், தான் தான் அமெரிக்காவின் உண்மையான அதிபர் என டிரம்ப் தொடர்ந்து பேசி வந்தார்.
இதையடுத்து ஜனவரி 6ஆம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு நடத்திய போராட்டம், அமெரிக்க அரசியல் வரலாற்றில் கரும்புள்ளியாக மாறியது.
இந்நிலையில், கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ஆதரவாளர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்ட, சிறைவாசிகளுடன் இணைந்து பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார் டிரம்ப்.
ஜனவரி 6ஆம் தேதி என குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டுள்ள J6 Prison Choir என அழைக்கப்படும் இந்த குழு அமெரிக்க தேசிய கீதத்தை பாட, டிரம்ப் பேசும் வாசகங்கள் இடையிடையே இணைக்கப்பட்டுள்ளன.
கைதிகள் சிறை தொலைபேசிகள் வழியாக இந்த பாடலை பாடி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற தாக்குதல் விவகாரத்தில் தனக்கு எதிரான ஆதாரங்கள் வலுத்து வரும் நிலையில், கைதிகளுடன் வெளிப்படையாக தொடர்புபடுத்தி நிலைமையை டிரம்ப் மேலும் சிக்கலாக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.