அதிமுகவின் ஒற்றை முகமாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி செய்த போதே, டான்சி மற்றும் சொத்துகுவிப்பு வழக்குகள் போன்ற இரண்டு நெருக்கடியான தருணங்களில் ஓ.பி.எஸ்ஸுக்கு முதல்வர் சீட் வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும் வி.கே.சசிகலாவின் முதல்வர் தேர்வாகவும் ஓ.பி.எஸ்ஸே இருந்தார்.
ஓ.பி.எஸ் அரசியலில் சுறுசுறுப்பாக செயல்பட விரும்பிய அந்த தருணத்தில், சசிகலாவுக்கும் முதல்வர் பதவி மேல் ஆசை வரவே, ஓ.பி.எஸ்ஸை ராஜினாமா செய்யுமாறு கூறினார். ராஜினாமா செய்த கையோடு தர்ம யுத்தத்தை ஓ.பி.எஸ் தொடங்கிய நேரத்தில், சசிகலா சிறை செல்ல நேரிட்டது. இதற்கிடையே ஈ.பி.எஸ் முதல்வராக தேர்வானார்.
ஓ.பி.எஸ்ஸுக்கு ஆதரவாக 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் களம் இறங்கினர். பெரிதாக அரசியல் மாற்றத்திற்கு வித்திடப் போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், துணை முதலமைச்சர் பதவியைப் பெற்று ஈ.பி.எஸ் அணியுடன் சமரசமாக இணைந்தார் ஓ.பி.எஸ். அவரை நம்பி வந்தவர்களுக்கு பெரிதாக பலன் இல்லாமல் போகவே, 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் எடப்பாடி அணியினருக்கே அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து தலை தூக்கிய ஒற்றைத் தலைமை விவகாரத்திலும் போராடுவது போல பல சிக்கல்களை உருவாக்கினாரே தவிர கட்சியை கைப்பற்றும் யூகங்களில் கவனம் செலுத்தவில்லை.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் திருமகன் ஈவேரா உயிரிழந்ததை அடுத்து, அங்கு நடக்க உள்ள இடைத்தேர்தலுக்கு ஓபிஎஸ் தரப்பில் செந்தில் முருகனும் ஈபிஎஸ் அணி தரப்பில் கே.எஸ்.தென்னரசும் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டனர். இவர்களில் யாருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்ற நிலை ஏற்படவே, கட்சியின் பொதுக் குழுவைக்கூட்டி வேட்பாளரை முடிவுசெய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
மொத்த பொதுக் குழு உறுப்பினர்களான 2665 பேரில் 2,501 பேரின் ஆதரவு எடப்பாடி தரப்பிற்குக் கிடைத்தது. பன்னீர்செல்வம் தரப்பில் 128 பேர் படிவங்களைப் பெற்றிருந்தாலும், ஒருவர்கூட தென்னரசிற்கு எதிராக, படிவங்களைச் சமர்ப்பிக்கவில்லை.
இரட்டை இலை சின்னம் முடங்கி விடக் கூடாது எனக்கூறி போட்டியில் இருந்து ஓபிஎஸ் அணி வேட்பாளர் வாபஸ் வாங்கினார். இந்தியத் தேர்தல் ஆணையம் அ.தி.மு.கவின் அதிகாரபூர்வ வேட்பாளரை முடிவுசெய்ய அவைத் தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அதிகாரம் அளித்ததை அடுத்து, தென்னரசு அதிகாரபூர்வ வேட்பாளராக தேர்வானார்.
நெருக்கடியான அரசியல் சூழல்களில், தனக்கு சாதகமான வலுவான வாய்ப்புகளும், ஆதரவாளர்களும் இருந்தாலும் அதை பயன்படுத்தி தனித்துவமான ஆளுமையாக உருவெடுக்காமல், பின்வாங்குவதையே ஓபிஎஸ் பழக்கமாக கொண்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.