சீதாராமன், பட்ஜெட் தாக்கல் செய்யும் போதெல்லாம் சில செய்யுள் வரிகளை சுட்டிக் காட்டுவது வழக்கம்.
2019ஆம் ஆண்டு நெல்லை அறுத்து யானைக்கு உணவாக அளித்தால் அது நீண்ட நாட்களுக்கு வரும் ஆனால், யானையே நிலத்தில் புகுந்து பயிர்களை கொய்து போட்டால் எல்லாம் வீணாகும் என்ற பொருள் தரும் பிசிராந்தையாரின் பாடல் வரிகளை குறிப்பிட்டு பேசினார் நிர்மலா.
அரசு வரி விதித்து மக்களுக்கான திட்டங்களை பிரித்து வழங்குவது குறித்து அவர் இவ்வாறாக பேசினார். 2020ஆம் ஆண்டு ‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து’ என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.
இதற்கு நோயில்லாதிருத்தல், செல்வம், விளைபொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் ஆகிய ஆறும் நாட்டிற்கு மிகவும் அவசியம் என அர்த்தம் ஆகும். 2021ஆம் ஆண்டு ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு’ என்ற குறளை குறிப்பிட்டு உரையை தொடங்கினார்.
முன்கூட்டியே சரியாகத் திட்டமிடல், உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல் என இந்த நான்கையும் மன்னன் அல்லது அரசு செய்ய வேண்டும் என்பதே இந்த குறளின் பொருளாகும்.
2022ஆம் ஆண்டு, அரசனானவன் குடியானவர்களின் நலனை உறுதி செய்ய சிறிதும் சுணக்கமின்றி அத்தனை ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். தர்மத்தின் வழியில் ஆட்சி நடத்த வேண்டும். தர்மத்தின் வழிநின்றே வரி வசூலிக்க வேண்டும் என்ற அர்த்தம் கொள்ளும் மகாபாரத ஸ்லோகனை வாசித்தார்.
எனினும், ஐந்தாவது முறையாக தொடர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்த ஆறாவது நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனின், இந்த ஆண்டு பட்ஜெட் உரையில், இதுபோன்ற சிறப்பு சுட்டிக்காட்டல்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.