படங்களின் வெற்றி தோல்வி எப்படி இருந்தாலும், தமிழ் நடிகர்கள் குறைந்தபட்சமாக ஐந்து கோடி முதல் அதிகபட்சமாக நூற்று ஐம்பது கோடி வரை சம்பளமாக பெறுகிறார்கள்.
ஆனால், மாதம் எழுபதாயிரம் வருமானம் ஈட்டும் ஒரு IT ஊழியர் பத்து கோடி சேர்க்க 125 வருடங்கள் பணியாற்ற வேண்டும். அதே பத்து கோடியை, 30 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் 250 வருடங்களும், 25 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் 333 வருடங்களும் பணியாற்றினால் தான் சம்பாதிக்க முடியும்.
அதிலும் மோசமாக, சாமானிய விவசாயி ஒருவருக்கு பத்து கோடி ஈட்ட 760 வருடங்கள் தேவைப்படும்.
நம் அபிமான நட்சத்திரங்களின் திரைப்படங்களை பார்க்க பணத்தை வாரி இறைத்து டிக்கெட் வாங்குகிறோம். நிர்ணயிக்கப்பட்ட விலையை தாண்டி கொடுக்க வேண்டி வந்தாலும் முண்டியடித்து டிக்கெட் வாங்கி முதல் காட்சியை பார்த்தால் தான் பலருக்கும் நிம்மதி பெருமூச்சே வருகிறது. ஆனால், நாம் உணவு சாப்பிட உழைத்து உழைத்து ஓடாக போகும் விவசாயிகளின் அவல நிலையை நாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஏன், யோசித்து கூட பார்ப்பதில்லை.
அப்படியே, விவசாயத்தை பற்றி நாம் நினைக்க வேண்டும் என்றால் அதற்கும் கடைசியில் ஒரு திரைப்படம் தான் தேவைப்படுகிறது. திரைப்படங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு சார்ந்த துறைகளை வெகுவாக வளர்த்தெடுக்கும் நாம், அதே போல் விவசாயிகளின் நலனுக்காகவும் பங்களிக்க முயற்சி செய்தால், அது அனைவருக்குமான அழகான எதிர்காலத்தின் தொடக்கமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.