தமிழர்களின் பாரம்பரிய உடையாக கருதப்படும் வேட்டி ஒரு காலத்தில் தமிழக ஆண்களின் பிரதான ஆடையாக இருந்தது.
நாகரீக வளர்ச்சி மற்றும் வாழ்க்கை சூழல் மாற்றங்கள் வேட்டி கட்டுவதை அரிதாக்கி விட்டது. சர்வதேச வேட்டி தினம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, வேட்டி தயாரிப்பு நிறுவனங்களும் பல சலுகைகளை அள்ளி வீச, வேட்டியின் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது.
ஆனால், இந்த தினம் கொண்டாடப்படுவதற்கு காரணம் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் என்பதை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கும் போது, பொங்கல் பண்டிகைக்கு முன் ஏதாவது ஒரு நாளில் பாரம்பரியத்தை நினைவுகூரும் வகையில் அனைவரும் வேட்டி கட்டி கொண்டாட அழைப்பு விடுத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு கடிதம் எழுதினார்.
இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து பலரும் கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் வேட்டி அணிந்து கொண்டாடினர்.
இந்த விவகாரம் உலக பாரம்பரியங்களை பாதுகாக்கும் அமைப்பான யுனெஸ்கோவின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டதை அடுத்து, 2015ஆம் ஆண்டு ஜனவரி ஆறாம் தேதி வேட்டி தினமாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வருடா வருடம் வேட்டி தினம் தனி நபர்கள், அலுவலகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.