மாண்டஸ் புயலின் காரணமாக சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளமாக தேங்கினாலும் அவற்றை அப்புறப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
புயலில் விழுந்த 3000க்கும் மேற்பட்ட மரங்களை அகற்றும் பணியில் மட்டும் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில், மாண்டஸ் புயல் தொடர்பான ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும்போது முதலமைச்சரின் கான்வாயில் மேயர் பிரியா footboard அடித்து தொங்கிக் கொண்டு சென்ற நிகழ்வு எதிர்கட்சியினரின் விமர்சனத்தில் தொடங்கி சமூகவலைதளங்களில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இந்த சம்பவத்தை பற்றி மேயர் பிரியா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் ஒரு இடத்தில் ஆய்வு செய்யும் போது இன்னொரு இடத்திற்கு சென்று ஏற்பாடுகளை செய்ய வேண்டி இருந்ததாகவும் அதனால் முன்னதாகவே தான் நடந்து சென்று கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.
மேலும், அதற்குள்ளாக கான்வாய் அங்கு வந்ததால் அதில் ஏறிக்கொண்டதாகவும் இந்த நிகழ்வு இவ்வளவு சர்ச்சையாக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். மேயர் பிரியா ராஜனின் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபுவும் ஆதரவு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.