நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் ராணியாகவே அறியப்பட்ட எலிசபெத், குதிரை பந்தயத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
தனது மூன்றாவது வயதிலேயே குதிரை ஓட்ட கற்றுக்கொண்ட எலிசபெத், பந்தயத்திற்காக குதிரைகளை தயார் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
பொழுதுபோக்காக தொடங்கி, பின் இங்கிலாந்தில் குதிரைப்பந்தய பெரும்புள்ளிகளில் முக்கியமானவராக அடையாளம் காணப்பட்டார்.
தனது சான்றிங்ஹாம் எஸ்டேட்டில், பந்தய குதிரை உரிமையாளராக இதுவரை கிட்டத்தட்ட 2000 குதிரைகளை போட்டிக்கு ஆயத்தப்படுத்தியது மட்டுமில்லாமல் பல போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளார் எலிசபெத்.
எலிசபெத்தின் தந்தை மற்றும் தாத்தா பந்தயத்திற்கு செல்லும்போது அணியும் நிறங்களான ஊதா, கருஞ்சிவப்பு மற்றும் தங்க நிற அடையாளங்களையே அவரின் குதிரைககளை பந்தயத்தில் ஓட்டுபவர்கள் அணிந்து கொள்வார்கள்.
குதிரைப்பந்தய நிகழ்வுகள் மகிழ்ச்சியான, சுறுசுறுப்பான, கலகலப்பான ராணியின் மறுபக்கத்தை வெளிகொண்டுவந்ததது என சொன்னால் மிகையாகாது. ராணியின் மறைவை ஒட்டி, British Racing Authority தங்களின் இருநாள் போட்டிகளை ரத்து செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.