இந்தியாவில் தீபாவளியில் இருந்து மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் 5G இணைய சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக ஜியோ நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக, இரண்டு லட்சம் கோடி முதலீட்டில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் 5G இணைய சேவை பரவலாக பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெட்டிசன்களை குஷிப்படுத்தும் இந்த அறிவிப்புடன், 5G சேவையின் சிறப்பம்சங்களை இத்தொகுப்பில் காண்போம். 4Gயை விட 10 மடங்கு வேகமாக செயல்படும் 5G, load ஆக எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரு மில்லி செகண்ட் மட்டுமே. ஒரு யூனிட் ஏரியாவில் 1000 மடங்கு அதிக அலைவரிசையை கொண்டுள்ளதால், நூற்றுக்கும் மேற்பட்ட மின்சாதனங்களுக்குள் இணையம் பகிர்ந்து கொள்ளப்பட்டாலும் வேகம் குறையாது.
Download செய்யும் வேகம் 4Gயை விட 100 மடங்கு அதிகம் இருப்பதால் முன்பை விட இணைய பயன்பாடு சுலபமாவது உறுதியாகிறது. 4Gயை விட வலுவான கட்டமைப்பு பெற்றுள்ள காரணத்தால் இணையம் முடங்குவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என கூறும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், 5Gயின் வருகையால் இணையம் பயன்பாட்டில் பல மாற்றங்கள் ஏற்படும் என கருத்து தெரிவிக்கின்றனர்.