ஐஸ்லாண்டில் (Iceland) உள்ள பிரபலமான ரெனிஸ்பிஜாரா (Renysfjara) எனும் கடற்கரை, தனித்துவமான புவியியல் அமைப்பை கொண்டுள்ள நிலப்பரப்பில் இடம்பெற்றுள்ளதால், கடற்கரை முழுதும் இயற்கையாகவே கருப்பு நிறத்தில் அமைந்துள்ளது.
இந்த அரிய காட்சியை காண உலக முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால், அழகான இந்த கடற்கரை அங்கு வந்த பலரின் உயிரையும் உறிஞ்சி வருவது தான் அதிர்ச்சியூட்டும் உண்மை.
இரண்டு மூன்று சிறிய அலைகள் சேர்ந்து உருவாகி, பெரிதாக வரும் ஸ்னீக்கர் (sneaker) அலைகள் சாதாரண அலைகளை விட மிக வேகமாகவும் வலுவாகவும் வீசும் தன்மை கொண்டுள்ளதால், கடற்கரையில் இருக்கும் மனிதர்களை கடலுக்குள் இழுத்து சென்று விடுகிறது.
இந்த வகை அலைகள், ரெனிஸ்பிஜாரா கடற்கரையில் அதிகம் வருவதால், கடந்த ஏழு வருடங்களில் ஐந்து பேர் வரை உயிரிழந்துள்ளனர். தற்போது பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரப்படுத்தபட்டுள்ள ரெனிஸ்பிஜாரா கடற்கரைக்கு, 2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் வந்த மக்களின் எண்ணிக்கை 133,000 என்பது குறிப்பிடத்தக்கது.