மழைக்காலம் வந்துவிட்டாலே மழையோடு சேர்ந்து இருமல், காய்ச்சல், தலைவலி என உடல் உபாதைகளும் சேர்ந்தே வந்து விடுகிறது.
பருவகால மாற்றங்களுக்கு நடுவே வரும் நோய் தொற்றுக்களை தவிர்க்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம்.
இதற்காக பெரிதாக செலவு ஏதும் செய்ய தேவை இல்லை. உங்கள் வீட்டை சுற்றி மற்றும் சமையலறையில் உள்ள உணவு பொருட்களை சரியாக பயன்படுத்தினாலே போதும்.
பொதுவாக பல வீட்டு தோட்டங்களில் காணப்படும் antioxidants நிறைந்துள்ள துளசி, மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் செயல்படுகிறது.
செரிமானத்தை சீராக்கும் இஞ்சி, உணவில் உட்கொள்ளப்படும் ஊட்டச்சத்துக்களை உடல் முழுமையாக உள்வாங்க செய்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது.
குடலில் சேரும் தேவையற்ற வாயுவை குறைக்கும் மிளகுக்கு நுண்கிருமிகளை கொல்லும் ஆற்றலும், காய்ச்சலை வலுவிழக்க செய்யும் தன்மையும் இயல்பாகவே உள்ளதால், தொடர்ந்து மிளகை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகின்றது.
நாம் சாதாரணமாக நினைக்கும் மஞ்சளில் பல விட்டமின் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன. நோய் தொற்று கிருமிகளை எதிர்த்து போராடக்கூடிய மஞ்சளை தவறாமல் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.
பூண்டில் உள்ள அல்லிசின் என்னும் உட்பொருள் பல நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பை அளிப்பதால், அவற்றை கூடுமான வரையில் எல்லா உணவுகளிலும் சேர்த்து கொள்ள வேண்டும்.
இவ்வாறான உணவு முறைகளை கடைபிடித்தால் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தியுடன், மழைக்கால உடல் உபாதைகளில் இருந்து சுலபமாக தப்பிக்கலாம் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.