ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறந்த நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள் என பலரும் திரை உலகை தன்வசப்படுத்துவது வாடிக்கை.
ஆனால், சினிமாவின் அத்தனை பரிமாணங்களிலும் தடம் பதித்து, தனக்கே உரித்தான தனித்துவமான கலையை ரசிக்கும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளவர், இன்று பிறந்தநாள் காணும் எஸ்.ஜே .சூர்யா என்றால் மிகையாகாது.
சங்கரன்கோவில் அருகே வாசுதேவநல்லூர் என்ற பகுதியில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் எஸ்.ஜே.சூர்யா. கல்லூரி படிப்பிற்காக சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் பட்டம் பெற்ற அவர், சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேட தொடங்கி, அதற்கிடையே தனக்கான செலவுகளை சமாளிக்க ஹோட்டல்களில் வேலை செய்தார்.
1993ஆம் ஆண்டே பாரதிராஜா இயக்கிய கிழக்கு சீமையிலே படத்தில் சூர்யாவுக்கு ஒரு சிறிய வேடம் கிடைத்தாலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் சுலபமாக கிடைக்கவில்லை.
உதவி இயக்குநராக பின் பணியாற்றி வந்த அவருக்கு 1999ஆம் ஆண்டு தனது முதல் படமான ‘வாலி’ தமிழ் சினிமாவில் அங்கீகாரத்தை ஏற்படுத்தி தந்தது.
அதற்கு பின் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய குஷியும் சூப்பர்ஹிட் அடித்து, அவரை வெற்றிமுக இயக்குநராக அடையாளம் காட்டியது.
‘நியூ’ படத்தில் நடிக்க தொடங்கிய எஸ்.ஜே.சூர்யா ‘கள்வனின் காதலி’, ‘திருமகன்’, ‘வியாபாரி’ படங்களில் நடித்து தனக்குள் இருந்த நடிகனை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினார்.
சற்றே நீண்ட இடைவெளிக்கு பின் 2015இல் தானே இயக்கி, நடித்து, இசையமைத்த ‘இசை’ படத்தின் மூலம் திரைக்கு திரும்பிய எஸ்.ஜே.சூர்யா ‘ஸ்பைடர்’, ‘மெர்சல்’ மற்றும் ‘மாநாடு’ படங்களில் நெகடிவ் ரோலில் நடித்து கவனம் ஈர்த்தார்.
‘நெஞ்சம் மறப்பதில்லை’ மற்றும் அண்மையில் வெளிவந்த ‘டான்’ படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள எஸ்.ஜே.சூர்யாவின் ‘கடமையை செய்’, ‘பொம்மை’, ‘மார்க் ஆன்டனி’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.