பிரதாப் போத்தனின் கலைப்பயணம்

356
Advertisement

கேரளாவில் பிறந்து, ஊட்டியில் பள்ளிப்படிப்பை முடித்து, சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் பட்டம் பெற்று, மும்பையில் வேலை செய்ய சென்ற போத்தனின் ஆரம்பகட்ட வாழ்க்கையும் அவர் இயக்கும் படங்களை போன்றே விறுவிறுப்பாக நகர்ந்தது.

கல்லூரி காலங்களில் நாடகங்கள் மீது கொண்ட ஈடுபாட்டால், Madras Players நாடக குழுவுடன் இணைந்து பல நாடகங்களில் நடித்து வந்தார்.

அப்படி போத்தன் நடித்த நாடகம் ஒன்றை பார்த்த மறைந்த மலையாள இயக்குநர் பரதன், ஆரவம் படத்தில் நடிக்க அளித்த வாய்ப்பின் மூலம் போத்தனின் திரைப்பயணம் துவங்கியது.

மூடுபனி, வறுமையின் நிறம் சிகப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள் போன்ற காலத்தால் அழியாத 80களின் கிளாசிக் படங்களில் நடித்து, சினிமா ஆர்வலர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருப்பவர் போத்தன். நடிகராக மட்டும் இல்லாமல், இயக்குநராகவும் தமிழ் திரையுலகில் தடம் பதித்தவர் போத்தன்.

1985ஆம் ஆண்டு, இவர் இயக்கிய முதல் படமான, ‘மீண்டும் ஒரு காதல் கதை’ தேசிய விருதை பெற்றது. மேலும் ஜீவா, வெற்றிவிழா, மை டியர் மார்த்தாண்டன், மகுடம், ஆத்மா, சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார்.

ரிதுபீடம், டெய்சி, ஒரு யாத்ர மொழி ஆகிய மலையாள படங்களையும் சைதன்யா என்ற தெலுங்கு படத்தையும் இயக்கிய பெருமை போத்தனை சேரும். கடந்த சில வருடங்களாக, Green Apple என்ற தனது விளம்பர agencyயின் மூலம் பல பிரபல நிறுவனங்களுக்கு விளம்பரம் தயாரித்து கொடுத்து வந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நூறு படங்களை நடித்து, ரசிகர்களின் மனங்களை கவர்ந்த போத்தன், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மக்களிடையே அதிர்ச்சியையும்  சோகத்தையும்  ஏற்படுத்தி உள்ளது. போத்தனின் மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் முக்கிய பிரமுகர்களும் தங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்து வருகின்றனர்.