ஓசோன்ல புதுசா விழுந்த பெரிய ஓட்டை

312
Advertisement

பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் தொழிற்சாலைகள், நகரமயமாதல், புவி வெப்பமடைதல் என சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் அனைத்து காரணிகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ, பூமியை காக்கும் படலமாக விளங்கும் ஓசோனை பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

எனினும், இதுவரை ஆஸ்திரேலியா, அண்டார்டிகா பகுதிகளில் ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டை தான் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்த ஓட்டையே பெருமளவு பாதிப்பு உண்டாக்கும் என நினைத்திருந்த நிலையில், புதிய ஓசோன் ஓட்டையை பற்றிய தகவல் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

வெப்ப மண்டல பகுதிகளில், உலகின் கீழடுக்கு வளிமண்டலத்தில் புதிய ஓசோன் ஓட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tropical ஓசோன் ஓட்டை என அழைக்கப்படும் இந்த ஓட்டை, முன்னமே பரவலாக அறியப்பட்ட அண்டார்டிக் ஓசோன் ஓட்டையை விட 7 மடங்கு பெரியதாக இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், அண்டார்டிக் ஓசோன் ஓட்டையுடன் ஒப்பிடும் போது, Tropical ஓசோன் ஓட்டையால்  25% அதிக ஓசோன் படல இழப்பு ஏற்பட்டு உள்ளதாக, ஆராய்ச்சியை மேற்கொண்ட கனடாவில் வாட்டர் லூ (Waterloo) பல்கலைக்கழகத்தை சேர்ந்த குயிங் பின் லு (Quing Bin Lu) தெரிவித்துள்ளார்.

மேலும், ஓசோனின் புதிய ஓட்டையால் அதிகரிக்கும் புற ஊதா கதிர்வீச்சு காரணமாக தோல் புற்றுநோய் மற்றும் கண்புரை மக்களை பாதிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறும் பின் லு, மனிதனுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதோடு,  விவசாய உற்பத்தித்திறன் குறைபாடு ஏற்பட்டு சுற்றுச்சூழல் அமைப்பு வெகுவாக பாதிக்கப்படும் என கருத்து தெரிவித்துள்ளார்.