Saturday, May 10, 2025

102 நாளில் 102 மாரத்தான்… கால் இல்லா பெண் உலக சாதனை

ஒரு கால் இல்லாத ஒரு பெண் 102 நாட்களில் 102 மாரத்தான்கள் ஓடி
உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த சாதனையை கின்னஸ்
நிறுவனம் அங்கீகரிக்க ஓராண்டு ஆகும்.

அமெரிக்காவைச் சேர்ந்த 46 வயதாகும் மாரத்தான் தடகள வீராங்கனையான
ஹன்ட் ப்ரோயர்ஸ்மா முழங்காலுக்குக் கீழே ஏற்பட்ட அரிய வகைப் புற்றுநோயால்
தனது இடது காலை இழந்துவிட்டார். ஆனாலும், சோர்ந்து போகாமல் பீனிக்ஸ்
பறவையாக வீறுகொண்டு எழுந்த ஹன்ட் உலக சாதனை நிகழ்த்த விரும்பியுள்ளார்.
அதற்காக கார்பன் பைபர் செயற்கைக் கால் பொருத்தினார்.

முதலில் தனது வீட்டருகே உள்ள பூங்காவில் ட்ரெட்மில்லை நிறுவி அதில் பயிற்சி
எடுக்க ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து 100 நாட்களில் 100 மாரத்தான்கள் ஓடி
அலிசா அமோஸ் கிளார்க் என்ற மாற்றுத்திறனாளியின் 95 மாரத்தான்கள் சாதனையை
முறியடித்தார்.

அடுத்த சாதனையாக 101 நாட்களில் 101 மாரத்தான்கள் ஓடிய பிரிட்டனைச்சேர்ந்த
கேட் ஜேடன் என்ற மாற்றுத்திறனாளியின் சாதனையை முறியடிக்க விரும்பினார்.
இதற்காகத் தினமும் நடைப்பயிற்சிகொண்ட ஹன்ட் 4 ஆயிரத்து 300 கிலோமீட்டர்
தொலைவு நடந்தார். இது கிட்டத்தட்ட நியூயார்க் நகரிலிருந்து மெக்சிகோ நகரம்
வரை ஓடுவதற்குச் சமமான தொலைவாகும்.

அப்படி நடந்துவரும்போது சமூக வலைத்தளங்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தார்.
இதன்மூலம் சக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் விலையுயர்ந்த செயற்கைக்
கருவிகளை வாங்குவதற்காக 27 ஆயிரம் டாலர் திரட்டி உதவினார்.

அடுத்ததாக. அக்டோபர் மாதத்தில் 104 நாளில் 104 மாரத்தான்களை ஓடி தனது
சாதனையை முறியடிக்கத் திட்டமிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளி என்று மற்றவர்களின் கழிவிறக்கத்தைப் பெறவிரும்பாமல், உலக
சாதனை புரிந்து, மாற்றுத்திறனாளிகளுக்கும் இயல்பான மனிதர்களுக்கும் முன்னுதாரணமாக
உயர்ந்துள்ளர் ஹன்ட்.

Latest news