கிரிப்டோ சந்தையில் பெரும் வீழ்ச்சி நிலவி வரும் சூழலில், வழக்கம் போல சிறு முதலீட்டாளர்கள் பாதிக்கப்படும் அளவிற்கு, பெரு முதலாளிகள் என்றுமே தாக்கத்தை உணர்வதில்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
உருவாக்கம் துவங்கி, முதலீடு, லாபம் என கிரிப்டோவின் அனைத்து பரிமாணங்களையும் சுற்றி சுழலும் மர்ம முடிச்சுகள் ஏராளம்.
இதுவரை, உலகிலேயே கிரிப்டோவால் அதிக வருவாய் ஈட்டிய நபர் தான் ரூஜா இக்னாடோவா.
பல்கேரியாவை சேர்ந்த ரூஜா, 2017இல் OneCoin என்ற தனது கிரிப்டோ கரன்சி மூலமாக முதலீட்டாளர்களை ஈர்த்து, பில்லியன் கணக்கில் லாபம் ஈட்டினார்.
தனது கிரிப்டோ பணத்தில் முதலீடு செய்தவர்களை, அதோகதியாக விட்டுவிட்டு, அதில் வந்த பணத்தை தனிப்பட்ட முதலீட்டுக்கு பயன்படுத்தி, கிடைத்த பெரும் தொகை மதிப்புள்ள கிரிப்டோ கரன்சியோடு தலைமறைவானார் ரூஜா.
மிகவும் நுணுக்கமான முறைகளை கையாண்டு, ரூஜா செயல்பட்டு இருப்பதால், அவர் மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க காவல் துறையும் வழக்கறிஞர்களுமே திணறி வருகின்றனர்.
175 நாடுகள், 4 பில்லியன் டாலர் கிரிப்டோ மோசடி, அதன் பின் உள்ள ஒரு பெண்ணின் கதையை கூறுவதாக ஜேமி பார்ட்லெட் எனும் எழுத்தாளர், ‘The Missing Cryptoqueen’ என்ற ஆய்வு புத்தகத்தை வெளியிட்டார்.
தொடர்ந்து, அதே பெயரில் 2019இல் BBC தொலைக்காட்சியின் தயாரிப்பில் வெளிவந்த Podcastஇல் ரூஜாவை பற்றிய பல புதிய தகவல்கள் வெளிவந்தன.
ரூஜா மீதுள்ள குற்றச்சாட்டின்படி, அவர் பதுக்கிய 230,000 bitcoin மதிப்பில், 15பில்லியன் வரை தற்போதைய கிரிப்டோ சூழ்நிலையால் நஷ்டம் அடைந்து இருந்தாலும், இன்னும் 5 பில்லியன் அவரிடம் இருப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது. கிரிப்டோவை ஒரு கை பார்த்த ரூஜாவின் பெயர், தற்போது FBIயின் 10 ‘Most Wanted’ பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
கிரிப்டோவை போலவே பல அடுக்குகளை கொண்ட ரூஜாவின் கதைக்கு தொடர்ந்து பலரும் விளக்கம் கொடுத்து கொண்டே இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.