இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்பையும், தனித்துவமான கலாச்சார பின்னணியையும் கொண்ட அமெரிக்காவில் உள்ள ஹவாய் மாநிலம், சுற்றுலாவாசிகளின் கனவு தேசம் என்றால் மிகையாகாது.
ஆனால், அமைதிக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து போன்று, உலகிலேயே அதிக சிறைவாசி விகிதத்தை ஹவாய் கொண்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா?
அதிலும், 1978ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை சிறையில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததது.
இதில், மிகவும் கவலை அளிக்கும் விஷயம், அந்த கைதிகளில் பெரும்பாலானோர் சிறுவர்கள் என்பதே.
இந்த சிக்கலான நிலைமையை கையாள ஹவாய் அரசு புதிய முயற்சியை கையாண்டு, குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டுள்ளது.
2014ஆம் ஆண்டு, Juvenile Justice Reform Bill என்ற சீரமைப்பு சட்டத்தை கொண்டு வந்த ஹவாய் அரசு, சிறைகளில் செய்யப்படும் செலவை பாதியாக குறைத்தது.
பின், அதில் மீதம் ஆகும் பணத்தை, சிறையில் இருக்கும் சிறுவர்களின் மன நல ஆலோசனை மற்றும் போதை மருந்துக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களை நடத்த செலவிட்டது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு வருடங்களிலேயே இளைஞர்களின் சிறை வரவு 28% வரை குறைந்தது.
இந்நிலையில், தற்போது ஹவாயில் கைலுவா என்ற நகரில் உள்ள சிறுவர் சீர்திருத்த மையம் ஒன்றில் பெண் குழந்தைகள் யாருமே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மனநலம் சார்ந்த சிகிச்சை, விழிப்புணர்வு மற்றும் கல்வியால் எத்தகைய மாற்றம் நிகழும் என்பதற்கு ஹவாய் சிறைகளே சான்று.