ரஷ்யா- உக்ரைன் போர் உக்ரமாக நடந்துவரும் நிலையில்,
ரஷ்ய வீரர் ஒருவரை உக்ரைன் பெண்கள் உபசரித்த செயல்
அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
பரபரப்பான அந்த சம்பவத்தின் வீடியோ ட்டுவிட்டரில்
வெளியாகியுள்ளது.
ரஷ்ய இளம்வீரர் ஒருவர் உக்ரைனுக்குள் சிக்கிக்கொண்டார்.
அதன் எதிரொலியாகத் தனது ஆயுதங்களைத் தூக்கியெறிந்துவிட்டு,
உக்ரைன் பொதுமக்களிடம் அவர் சரணடைந்தார்.
தங்களிடம் சரணடைந்த அந்த வீரருக்கு உக்ரைன் தாய்மார்கள்
உணவும் தேநீரும் கொடுத்து உபசரித்தனர். அத்துடன் தங்கள்
செல்போனைக் கொடுத்து அவரது தாயுடன் பேசச் செய்தனர்.
ஒரு கையில் உணவும் மறு கையில் தேநீர்க் கோப்பையும் வைத்துள்ள
அந்த வீரர்முன் ஒரு பெண் செல்போனைப் பிடித்துக்கொள்ள, தனது
தாயிடம் பேசுகிறார் சரணடைந்த ரஷ்ய வீரர். எதிர்முனையில் தன்
தாயின் குரலைக்கேட்டதும் கண்ணீர்விட்டுக் கதறத் தொடங்குகிறார்.
அப்போது உக்ரைன் வீரர்கள் தாயுள்ளத்துடன் அந்த வீரரின் முதுகைப்
பாசத்தோடு வருடிக்கொடுக்கின்றனர். அத்துடன் அந்த வீரரின் தாய்க்கும்
ஆறுதல் கூறுகின்றனர் உக்ரைன் தாய்மார்கள்.
உக்ரைன் மக்களின் இரக்கக் குணத்தை அனைவரும் பாராட்டி
வருகின்றனர். உக்ரைன் தாய்மார்களின் அன்பையும் பாசத்தையும்
பார்த்தாவது ரஷ்யா போரைக் கைவிட வேண்டும் என்று வலைத்
தளவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.