குழந்தைகளுக்கு அப்பாவின் அன்பு அவசியம் தேவை.
பிள்ளைகளுக்கு சொத்து சேர்ப்பதைவிட முக்கியம்
அவர்களுடன் செலவிடும் மதிப்புமிக்க நேரம்தான்
என்கின்றனர் மனநல மருத்துவர்கள்.
குழந்தைப் பருவத்தில் அப்பாவின் அரவணைப்பு தவிர,
அவசியமான வேறு எந்தத் தேவையும் இருப்பதாக நினைக்க
முடியவில்லை என்கின்றனர்.
குழந்தைகளிடம் அடிவாங்கி அழுவதுபோல நடித்துக்
கன்னத்தில் முத்தமிட்டு தோளில் கட்டிக்கொண்டுப்
பம்பரமாகச் சுற்றும் அப்பாக்களுக்கு மட்டுமே இதயத்தில் இடம்.
அப்பாவுடன் இருக்கும்போது குழந்தைகளுக்கு நேர்மறையாக
சிந்திக்கும் குணம் அதிகரிக்கிறது. மன வளர்ச்சி ஆரோக்கியமாக
இருக்கிறது. அதிக தன்னம்பிக்கை பெறுகிறார்கள்.
சமூகத்துடனான பழக்கமும் புத்திக்கூர்மையும், நுண்ணறிவுத்
திறனும் அதிகரிக்கின்றன. மொழித்திறன் மேம்படுகிறது.
கல்வியில் முழுத்திறனையும் வெளிப்படுத்துகின்றனர்.
எந்தப் பிரச்சினையையும் எளிதாக அணுகுகிறார்கள்.
குழந்தையின் திறமையை வளர்க்க கடைகளில் பொருட்களைத்
தேடும் அப்பாக்கள் தினமும் ஒரு மணி நேரமாவது குழந்தையுடன்
விளையாட வேண்டும்.
எல்லாக் குழந்தைகளும் பிறக்கும்போது முழுத்திறமையுடனும்
அறிவுடனும்தான் பிறக்கின்றன.
ஒரு மின்னல் விழுந்ததும் மலையிலுள்ள ஊற்றுக்கண் திறப்பதுபோல,
குழந்தைகளுக்குள் இருக்கும் அறிவுக்கண்ணைத் திறக்கும் அதிசய மின்னல்
அப்பாக்களின் அன்பில் ஒளிந்துகிடக்கிறது.
தான் சந்திக்கும் விஷயங்களை ஆராய்ந்து தெளிவுபடுத்திக்கொள்ளும்
போக்கைக் குழந்தைகளிடம் பார்க்க முடியும். அப்பாவுடன் விளையாடுவது,
விவாதிப்பது என்று செயல்படும்போது மூளையின் செயல்பாடு
அதிக அளவில் தூண்டப்படுகிறது.
இப்போது சொல்லுங்கள்…குழந்தைகளுக்கு அப்பாவின்
அரவணைப்பு அவசியம்தானே….
வேறெங்கும் கிடைக்காத ஒரே சொத்து அப்பாவின் அன்பு.
சிறந்த சமுதாயத்தை உருவாக்கக் குழந்தைகளுக்கு அன்பைத்
தாராளமாகத் தாருங்கள்.