முகக் கவச ஏடிஎம், தங்க நகை ஏடிஎம் வரிசையில் உணவு தானிய
ஏடிஎம்மும் வந்துவிட்டது. இனி, ரேஷன் கடையில் மணிக்கணக்காக
கியூவில் நிற்க வேண்டிய அவசியமில்லை.
ஹரியானா மாநில அரசு இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
முதற்கட்டமாக சோதனை முயற்சி அடிப்படையில் குருகிராம் என்னும்
கிராமத்தில் ஃபாருக் நகர் நியாய விலைக்கடையில் இந்த உணவு தானிய
ஏடிஎம்ஐ நிறுவியுள்ளது.
இந்தத் திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில் ஹரியானா மாநிலம் முழுவதும்
இந்த உணவு தானிய ஏடிஎம்களை நிறுவ அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது-
இந்த எந்திரம் TOUCH SCREEN வசதியுடன் உள்ளது- கைரேகைப் பதிவு வசதி
உள்ளதால், ஸ்மார்ட் கார்டு அல்லது ஆதார் கார்டு எண் மூலமாக இந்த எந்திரத்திலிருந்து
உணவு தானியங்களைப் பெறலாம்.
5 முதல் 7 நிமிடங்களுக்குள் இந்த ஏடிஎம் எந்திரத்தின்மூலம் 70 கிலோ வரை
உணவு தானியங்களைப் பெறமுடியும்.
குளறுபடிகள் ஏற்படாவண்ணம் இந்த எந்திரம் நிறுவப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே முதன்முதலாக நிறுவப்பட்டுள்ள இந்த உணவு தானிய ஏடிஎம்
இந்தியா முழுவதும் நிறுவப்பட்டால், குடும்ப அட்டைதாரர்களுக்கு நேரம் மிச்சமாகும்.
கடைப்பணியாளர்களுக்கும் அட்டைதாரர்களுக்கும் இடையே எவ்வித மனக்கசப்பும்
வரவாய்ப்பில்லை.
வேறெந்த முறைகேட்டுக்கும் வாய்ப்பில்லை. புரட்சிகரமான இந்த உணவு தானிய
ஏடிஎம் மூலம் சரியான அளவில் தானியங்களைப் பெறமுடியும் என்பதால், பெரு
மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர் ஹரியானா மாநிலப் பொது மக்கள்.