Tuesday, May 13, 2025

விமானத்தில் பறந்த பாம்பு

கொல்கத்தாவில் பயணிகளின் சுமைகளை இறக்கிக்கொண்டிருந்த
விமானத்துக்குள் பெரிய பாம்பு ஒன்று புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கொல்கத்தாவிலிருந்து மும்பைக்கு இன்டிகோ விமானம் ஒன்று
வழக்கமாக இயங்கி வருகிறது. வழக்கமாகச் செல்லும் விமானத்துக்குப்
பதிலாக வேறொரு விமானம் மும்பைக்குச் செல்லவிருந்தது.
இதற்காக சில நாட்களுக்குமுன் விமானம் ஒன்று ராய்ப்பூரிலிருந்து
கொல்கத்தா விமான நிலையத்துக்குள் வந்தது.

அப்போது மாலை 6 மணி. உடனே மும்பைக்குப் புறப்பட வேண்டும் என்பதால்,
அதில் பயணம் செய்தவர்களின் உடைமைகளை விரைவாக இறக்கத் தொடங்கினர்
விமான நிலைய ஊழியர்கள்.

அப்போது அவர்களுக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. விமானத்தில் உள்ள
ஒரு கம்பியில் பாம்பு ஒன்று சுற்றியிருந்தது. அதைக்கண்ட ஊழியர்கள்
உடனடியாக மேலதிகாரிகளுக்குத் தகவல் சொல்ல. அவர்கள் கொல்கத்தா
வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் பாம்பை
லாவகமாகப் பிடித்து அப்புறப்படுத்தினர். இதனால் விமான நிலைய
அதிகாரிகள் பீதியிலிருந்து விடுபட்டனர். மேலும், பிடிபட்ட பாம்பு எலியை
உண்ணும் விஷமற்ற பாம்பு என்பதால் அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

அதேசமயம், பயணிகள் விமானத்துக்குள் ஏறவில்லை என்பதால்
மனநிறைவும் அடைந்தனர். இந்த வீடியோவைப் பத்திரிகையாளர்
ஒருவர் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

இதுபற்றிக் கிண்டலாகப் பதிவிட்டுள்ள அவர், விமானத்தின் 15 ஆவது
வருட சலுகையைக் கொண்டாட வந்திருக்குமோ என்று கேட்டுள்ளார்.

அதிகாரிகள் உஷாரா இருக்கற வரை பாம்பால ஒண்ணுமே பண்ண முடியாது.

Latest news