Friday, December 27, 2024

வேலையை விட்டுவிட்டு ஊர்சுற்றும் இளம்தம்பதி

https://www.instagram.com/p/CTqvfkzPfX-/?utm_source=ig_web_copy_link

இந்தியா முழுவதும் சுற்றிப் பார்ப்பதற்காக வேலையை ராஜினாமா செய்துள்ள இளம் தம்பதி பற்றிய விஷயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்தவர்கள் 31 வயதான ஹரிகிருஷ்ணன் 24 வயதான லஷ்மி தம்பதி. பெங்களூரு நகரில் விற்பனை அதிகாரியாகப் பணியாற்றிவந்த ஹரிகிருஷ்ணனும் கிராபிக் டிசைனராகப் பணியாற்றிவந்த லஷ்மியும் முதலில் சாதாரணமாகப் பழகத் தொடங்கினர்.

அப்போதுதான் அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மொட்டுகள் இருப்பதை உணரத் தொடங்கினர். அதன்பிறகு வெளிப்படையாக ஒருவரையொருவர் மனதார நேசிக்கத் தொடங்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து திருமணம் செய்துகொண்டனர்.

திருமணம் செய்துகொண்ட சிறிதுகாலத்திலேயே இருவரும் சுற்றுலா செல்வதில் ஆர்வம் காட்டினர். முதலில் ரிஷிகேஷ், ஹிமாச்சலப்பிரதேசக் கிராமங்கள், ஹம்பி, சிக்மக்ளூர் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவந்தனர்.

2019 ஆம் ஆண்டில் தேனிலவுக்காகத் தாய்லாந்து நாட்டுக்குச் சென்றபோது உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்ற சிந்தனை அவர்களுக்குப் பிறந்தது.

அதன் எதிரொலியாக, இருவரும் தாங்கள் செய்துவந்த வேலையை ராஜினாமா செய்தனர். இரண்டரை லட்ச ரூபாய் செலவில் இந்தியா முழுவதும் சாலை மார்க்கமாக சுற்றுலா செல்ல முடிவுசெய்தனர்.

அதற்காகத் தங்கள் காரை வீடுபோல் மாற்றியமைத்தனர்.
மூன்று 10 லிட்டர் கேன், ஒரு சிறிய பர்னர் அடுப்பு, 5 கிலோ கேஸ் ஸ்டவ் ஆகியவற்றுடன் தங்கள் சுற்றுலாப் பயணத்தைத் தொடங்கினர்.

மூன்று வேளையும் சமைத்து உண்டு தங்கள் பயணத்தைத் தொடர்கின்றனர். 2020 ஆம் ஆண்டு, அக்டோபர் 28 ஆம் தேதி தங்கள் சுற்றுலாப் பயணத்தைத் தொடங்கிய இந்தத் தம்பதி இதுவரை 6 மாநிலங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் பயணித்துள்ளது. தங்களின் சுற்றுலா அனுபவங்களைத் தங்களின் யூ டியூப் சேனலில் ஒளிபரப்பி வருகின்றனர்.

ஊரடங்கு நேரத்தில் பலரும் வேலை, வருமானத்தை இழந்த நிலையில், வேலையை ராஜினாமா செய்துவிட்டு சுற்றுலா கிளம்பியுள்ள இந்த இளம் தம்பதியினர் சுற்றுலா விரும்பிகளை மட்டுமன்றி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

Latest news