துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 14 ஆவது ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் போட்டியின்போது சிஎஸ்கே அணியின் வெற்றிக்காகப் பிராத்திக்கொண்டே இருந்தார் ஒரு ரசிகை. சிஎஸ்கே வெற்றிபெற்றதும், பார்வையாளர் மாடத்தில் இருந்த அந்தக் குட்டி ரசிகைக்கு கேப்டன் தோனி கிரிக்கெட் பந்தைக் கொடுத்து ஆசுவாசப்படுத்திய செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆட்டத்தைத் தொடங்குவதற்காக பூவா தலையா போட்டுப் பார்த்ததில், ஃபீல்டிங்கைத் தேர்வுசெய்தார் தோனி. அதைத் தொடர்ந்து பேட்டிங்கைத் தொடங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களைக் குவித்தது.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய சிஎஸ்கே முதல் ஓவரிலேயே வீரர் டூபிளசிஸைப் பறிகொடுத்து ஏமாற்றமளிக்கத் தொடங்கியது. என்றாலும், அதன்பின் ஜோடி சேர்ந்த ராபின் உத்தப்பா ருத்துராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்து நம்பிக்கையூட்டத் தொடங்கியது.
இந்த சூழ்நிலையில், 19 ஆவது ஓவரின் முதல் பந்தில் மற்றுமொரு விக்கெட்டை இழந்த நிலையில் களத்தில் புயலாக இறங்கினார் தோனி. புயல் எந்த திசையில் வீசுமெனக் கணிக்கமுடியாத நிலையில் 11 பந்துகளில் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரி என்று விளாசித்தள்ளி ரசிகர்களை ஆனந்த மழையில் நனையச் செய்தார்.
சிக்ஸர் அடித்ததும் கேலரியில் இருந்த ஒரு குட்டி ரசிகை அழத்தொடங்கினார்…சிஎஸ்கே வெற்றிபெறுமா….ரசிகர்களைத் தவிக்கவிட்டு விடுமா என்ற நிலையில் அவரின் கண்ணீர் தோனிக்குப் புதிய உத்வேகம் அளித்தது, பவுண்டரிக்குள் பந்தை அனுப்பத் தொடங்கினார்.
18 ரன்களைக் குவித்துக் கொண்டாட்ட வளையத்துக்குள் ரசிகர்களைக் கொண்டுவந்தார். ஆட்டம் நிறைவடைந்ததும் தனக்கு ஊக்கமளித்த அந்தக் குழந்தையின் இருப்பிடம் அருகே கீழே நின்று குழந்தையை நோக்கிப் பந்து ஒன்றை உயரே எறிய அக்குழந்தை பெற்றுக்கொண்டாள்.
இந்த மாதிரி ரசிகர்கள் இருக்கும்வரை சென்னை சூப்பர் கிங்ஸை யாரும் அசைச்சுக்கவே முடியாது.