வாடிக்கையாளரின் உயிரைக் காப்பாற்றிய செல்போன்

264
Advertisement

கொள்ளையன் சுட்டதிலிருந்து வாடிக்கையாளரின் உயிரை 5 வருடப் பழைய செல்போன் காப்பாற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒருவர் சில மாதங்களுக்குமுன்பு தனது செல்போனை சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டு நடந்துபோய்க் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த கொள்ளையன் ஒருவன் அவரிடம் கொள்ளையடிக்க முயன்றுள்ளான்.

அவர் மறுத்துத் தடுக்கவே, அடித்து உதைத்துள்ளான். அப்போது சட்டென்று தனது துப்பாக்கியை எடுத்து அவரை நோக்கி சுட்டுள்ளான். அவன் வைத்த குறி தப்பவில்லை. நெஞ்சை நோக்கித் துப்பாக்கிக் குண்டு சென்றுள்ளது.

ஆனால், அவரது சட்டைப் பையில் இருந்த மோட்டோ 5ஜி செல்போன்மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது.

அந்த செல்போன் துப்பாக்கிக் குண்டை நெஞ்சுக்குள் புகாதவாறு தடுத்துவிட்டது. இதனால் உயிர் பிழைத்துக்கொண்டார் சுடப்பட்ட நபர். கொள்ளையன் தாக்கியதில் சிறிது காயமடைந்த அந்த செல்போன் உரிமையாளர் பெர்னாம்புக்கோ மாகாணத்திலுள்ள பல்கலைக் கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

2021 ஆம் ஆண்டு, அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தை தி டெய்லி மெயில் நாளிதழ் வெளியிட்டுள்ளது. என்றாலும், குற்றவாளியின் புகைப்படமோ, சுடப்பட்டவரின் படமோ வெளியிடப்படவில்லை.