Friday, December 27, 2024

இந்திய ரூபாய்த் தாள் எதில் தயாரிக்கப்படுகிறது தெரியுமா?

அனைவருக்கும் பணம் என்றாலே சந்தோஷம் பிறந்துவிடுகிறது. பணம் நம் கையில் இருந்தால் மட்டற்ற மகிழ்ச்சிதான். அந்தப் பணம் எதில் அச்சடிக்கப்படுகிறது தெரியுமா?

காகிதத் தாளில்தான் என்பது பலரின் எண்ணமாக இருக்கலாம். அது உண்மையில்லை.
பருத்தி என்பதே சரியான பதில்.

ஆம். பருத்தியில்தான் இந்தியா உள்பட பல நாடுகளின் ரூபாய்த் தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன.

காகிதத்திற்கு நீண்ட ஆயுள் கிடையாதென்பதால், பருத்தியே ரூபாய்த் தாள்கள் அச்சடிக்கப் பயன்படுத்தப்படுகிறது. பருத்தியில் அச்சடிக்கப்படும் ரூபாய்த் தாள்கள் நீண்டகாலம் அழியாமல், கிழியாமல் நீடித்திருக்கும். இந்திய ரிசர்வ் வங்கித் தகவல்படி, ரூபாய்த் தாள் 100 சதவிகிதம் பருத்தியில்தான் அச்சடிக்கப்படுகின்றன.

பருத்தி நாரில் லினன் எனப்படும் நார்ச்சத்து உள்ளது. பருத்தியுடன் ஜெலட்டின் கரைசல் கலந்து ரூபாய்த் தாள்கள் தயாரிக்கப்படுகிறது. இப்படித் தயாரிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் நீண்டகாலம் நிலைத்திருக்கும்.

இந்திய ரூபாய்த் தாள்கள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன. குறிப்பாக, கள்ள நோட்டுகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் தயாரிக்கப்படுகின்றன. அதனால், இந்திய ரூபாய்த் தாள்களின் வடிவமைப்பு அவ்வப்போது மாற்றப்படுகிறது.

இந்தியாவில் ரிசர்வ் வங்கிக்கு மட்டுமே ரூபாய்த் தாள்களை வெளியிடும் உரிமை உள்ளது. ரிசர்வ் வங்கி, மத்திய அரசு மற்றும் சில பங்குதாரர்கள் கலந்தாலோசித்து ஓராண்டுக்குத் தேவையான ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.

புழக்கத்திலுள்ள மிகவும் அழுக்கடைந்த, கிழிந்துள்ள ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு சரிபார்க்கப்பட்ட பின்னர் அழிக்கப்படுகின்றன.

Latest news