குறைமாதத்தில் சொற்ப எடையுடன் பிறந்த குழந்தை ஒன்று சமீபத்தில் தனது முதல் பிறந்த நாளைக் கொண்டாடி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த மைக்கேல் செல்லி பட்லர் என்கிற பெண் கடந்த ஆண்டு கர்ப்பமுற்றிருந்தார். 2020 ஆம் ஆண்டு, நவம்பர் 11 ஆம் தேதியை டெலிவரி நாளாக மருத்துவர்கள் கணித்திருந்தனர். ஆனால், அதற்கு முன்னதாக ஜுலை 4 ஆம் தேதியே செல்லிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
உடனே, பிர்மிங்ஹாம் நகரிலுள்ள அலபாமா பல்கலைக் கழக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கருவுற்ற 21 வாரங்களிலேயே அவருக்கு சிசேரியன் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து, ஜுலை 5 ஆம் தேதி பகல் 1 மணி அளவில் இரட்டை சிசுவை வெளியே எடுத்துள்ளனர். அதில், பெண் சிசு பிறந்த மறுநாளே இறந்துவிட்டது. ஆண் சிசுவான கர்டிஸ் மட்டுமே உயிர் பிழைத்துள்ளது.
என்றாலும், வெறும் 420 கிராம் மட்டுமே எடைகொண்டிருந்த கர்டிஸும் உயிர் பிழைக்க ஒரு சதவிகிதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறினர்.
பெற்றோரின் உள்ளங்கையால் சுமக்கும் அளவுக்கு இருந்த அந்த சிசுவை மருத்துவர்கள் தொடர்ந்து 9 மாதங்கள் மருத்துவமனைக் கண்காணிப்பில் வளர்த்தனர். மருத்துவக் குழுவின் நேரடிக் கண்காணிப்பில் வளரத் தொடங்கிய அந்த சிசுவின் உடல் மெல்லமெல்ல தேறிவந்தது.
அதைத் தொடர்ந்து, குழந்தையின் உடல்நிலைக்கு ஆபத்தில்லை என்பதை உணர்ந்த மருத்துவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்தனர். இந்நிலையில், கடந்த ஜுன் 5 ஆம் தேதி சிசுவின் முதல் பிறந்த நாளைக் கொண்டாடிப் பேரானந்தம் கொண்டுள்ளனர் கர்டிஸின் பெற்றோர்-
கர்டிஸின் தாய் தந்தை இருவருமே புகழ்பெற்ற வழக்கறிஞர்கள். தங்கள் குழந்தையை சிறந்த வழக்கறிஞர் ஆக்கப்போவதாகப் பெற்றோர் கூறியுள்ளனர்.
பொதுவாக, மகப்பேறு காலம் என்பது 40 வாரங்கள் அல்லது 280 நாட்களாக உள்ளது. ஆனால், 19 வாரங்களுக்கு முன்பாகவே அதாவது, 132 நாட்களுக்கு முன்பே குழந்தை பிறந்து நன்றாக இருப்பது உலக அதிசயமாகியுள்ளது.